அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். 4 பேர் ‘சன்பாத்’ எடுத்துக்கொண்ட நேரத்தில், ஒருபெண் மட்டும் நான் நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு, கடற்கரையில் நடந்துசென்றிருக்கிறார். அப்போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பக்கத்திலுள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கிக்கொண்டு போய் அதில் ஒருவன் கற்பழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் உடனடியாக தூதரகத்துக்கு புகார்செய்ய, இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது.
‘‘பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அனைவருக்கும் இது வேதனையளிக்கிறது. ஆக, சுற்றுலா தலங்களில் இன்னும் பாதுகாப்பை மேம்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல்இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளையும் இதேபோல அதிகளவில் ஈர்த்தால், பொருளாதார நிலைமை மேம்படுமே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மலையும் மலைவாழ் சார்ந்த இடங்களும் கொண்ட ‘குறிஞ்சி’ நிலமும், காடும் காடுசார்ந்த இடங்களை கொண்ட ‘முல்லை’ நிலமும், வயலும் வயல்சார்ந்த கொண்ட ‘மருதம்’ நிலமும், கடலும் கடல்சார்ந்த இடமும் கொண்ட ‘நெய்தலும்’, மணலும் மணல்சார்ந்த ‘பாலை’ நிலமும் ஒருங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, மனங்களில் மகிழ்ச்சி. சுற்றுலா வருமானத்தை மட்டும் பெருக்காமல், பண்பாட்டை பரிமாறவும் பேருதவி புரிகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக வந்தால் அது விரையம் அல்ல ‘கிரையம்’ என்ற உணர்வுகளை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
சுற்றுலா தலங்களுக்கு என தனியாக சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அமைக்க அரசு பரிசீலிக்கலாம். சுற்றுலாத்தலங்களில் உள்ள மக்களுக்கு, நம்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் நமது சகோதர–சகோதரிகள். இங்கு வந்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு, அல்லது சொந்தநாட்டுக்கு திரும்பும்போது, அவர்கள் ஒரு தாய்வீட்டுக்கு, சகோதரன்–சகோதரி வீட்டுக்குவந்த இனிமையான உணர்வோடு திரும்ப வேண்டும் என்பதையே முக்கியக்குறிக்கோளாக தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment