4ஜி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்!
By DIN |
Published on : 04th April 2017 12:33 AM
செல்லிடப்பேசிக்கான அகண்ட அலைவரிசை வேகம் குறித்த பிப்ரவரி மாதத்துக்கான புள்ளிவிவரங்களை திங்கள்கிழமை வெளியிட்ட டிராய் அதில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற பிப்ரவரியில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பதிவிறக்க வேகம் 16.48எம்பிபிஎஸ் (மெகாபிட்ஸ் பெர் செகண்ட்)-ஆக இருந்தது. ஜனவரி மாத வேகமான 17.42எம்பிபிஎஸ் வேகத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இருப்பினும், அந்த மாதத்தில் அதுவே மிகவும் வேகமான இணைய சேவையாகும்.
இந்த வேகத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஜியோவின் 4ஜி வேகம் அதன் போட்டி நிறுவனங்களான ஐடியா செல்லுலார் (8.33எம்பிபிஎஸ்), மற்றும் ஏர்டெல் (7.66எம்பிபிஎஸ்) நிறுவனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
மேலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அந்த இரண்டு நிறுவனங்களின் 4ஜி வேகம் பிப்ரவரியில் குறைந்து போயுள்ளது.
இவை தவிர, வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி வேகம் 6.13 எம்பிபிஎஸ்-லிருந்து 5.66எம்பிபிஎஸ்-ஆகவும், பி.எஸ்.என்.எல். வேகம் 2.89 எம்பிபிஎஸ்-லிருந்து 2.01எம்பிபிஎஸ்-ஆகவும் சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டொகோமோ மற்றும் ஏர்செல் ஆகியவற்றின் 4ஜி வேகம் பிப்ரவரியில் முறையே 2.67எம்பிபிஎஸ், 2.52எம்பிபிஎஸ் மற்றும் 2.01எம்பிபிஎஸ்-ஆக இருந்தது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment