Friday, April 7, 2017

 மாத தவணையில் வீட்டுமனைக்கு பணம் கட்டியோர்... பரிதவிப்பு!  ரியல் எஸ்டேட் முதலைகளிடம் சிக்கிய அப்பாவிகள்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவால், சொந்த வீடு ஆசையில், மாத தவணையில், பல ஆயிரம் ரூபாய் கட்டிய, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கூலி தொழிலாளர்கள், மனையும் கிடைக்காமல், கட்டிய பணமும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கின்றனர்.சென்னை மாநகர பகுதியின் தற்போதைய மக்கள்தொகை, 75 லட்சம் பேர். இதில், 60 சதவீதம் பேர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள். அதிலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற வணிக பகுதிகளில், கடைகளில் விற்பனையாளராகவும், பிளாட்பாரங்களில் கடை வைத்தும், தினக்கூலி வேலை செய்து பிழைப்போர், 30 சதவீதம் பேர்.இவர்களது, அன்றாட வருமானம், அதிகபட்சம், 500 ரூபாய். ஆனால், சென்னையில் குடும்பத்துடன் வசிக்க, குறைந்தபட்சம், 6,000 ரூபாய் வாடகை தர வேண்டும். அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினாலும், வீட்டு உரிமையாளர்கள், அதற்கும், யூனிட் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்

.பத்திரப்பதிவுவாடகைக்கும், மின் கட்டணத்திற்கும் பெரும் தொகையை செலவழித்துவிட்டு நிற்கும் இந்த அப்பாவி தினக்கூலி பணியாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சொந்த வீடு வாங்கும் ஆசையில், குருவி போல சேமித்து வைத்த பணத்தை, மாத தவணையாக கட்டி, சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில், 600 - 1200 சதுரடி வரை வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டினர்.அவர்களை குறி வைத்து, ரியல் எஸ்டேட் கும்பல், செங்கல்பட்டு, வாலாஜாபாத் போன்ற, சென்னையில் இருந்து, 60 கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளின் உட்புறங்களில், அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலங்களை, பிளாட் போட்டு காண்பித்து, மாத தவணையை வசூலிக்க ஆரம்பித்தன.ஒரு மனைக்கு, 2,000 - 5000 ரூபாய் மாத தவணை வசூலிக்கப்பட்டது. மொத்தம், 20 முதல், 30 மாதம் வரை, இந்த மாத தவணையை செலுத்த வேண்டும். 'சிறுசிறுக பணம் கட்டினாலும், வீட்டு மனை சொந்தமாகிவிடும்' என்ற நினைப்பில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இந்த மாத தவணை வீட்டு மனை திட்டத்தில் பணம் கட்டிஉள்ளனர்

.இதுபோன்ற மாத தவணை திட்டத்தில் போடப்பட்ட பிளாட்டுக்கள் எல்லாமே, விளைநிலங்களாகவும், நஞ்சை நிலங்களாகவும் உள்ளவை தான். மாத தவணை முழுமையாக செலுத்திய பின்னரே, இந்த மனைகள் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்பது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் வகுத்த வழிமுறை.

நீதிமன்ற உத்தரவுஆனால், வீட்டு மனையின் மதிப்பிற்கு, பாதி தொகையை, அப்பாவிகள் செலுத்திவிட்ட நிலையில், விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. இதனால் மாத தவணை கட்டுவதை, அப்பாவிகள் நிறுத்திவிட்டனர்.தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர, ரியல் எஸ்டேட் புரமோட்டர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'நீதிமன்ற தடை நீங்கியதும், மீதி பணத்தை கொடுத்து வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டும்; கட்டிய பணத்தை திருப்பி தர மாட்டோம்' என, புரமோட்டர்கள் கூறி வருகின்றனர்.ஏமாற்றம்இந்நிலையில், சமீபத்தில், ஏற்கனவே பதிவு செய்த மனைகளை, மறுபதிவு செய்யலாம் என்றும், முதல் பத்திரப்பதிவு மட்டும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இந்த உத்தரவு, அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கி, மறு விற்பனை செய்ய முடியாமல் தவித்தோர் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தாலும், மாத தவணையில், வீட்டு மனை பெற, பணம் கட்டியோருக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.விளை நிலங்களை, வீட்டு மனைகளாக வாங்க வேண்டும் என்பது, கூலி தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பம் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய பணம், திரும்ப கிடைத்தால் கூட போதும் என்ற நிலையே உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, யாரிடம் முறையிடுவது என தெரியாமல், அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024