அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை
பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை
அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆனால், விஜய பாஸ்கர் அமைச்சர் பதவி யில் இருந்து விலகவில்லை.ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க, அவரை அமைச்சர் பதவி யில்இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார்; அதை தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், அமைச்சரவையில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர்கள் விடுதி, பார்வையாளர்கள் இரவு காப்பகம், தேர்வுக் கூடம், விரிவுரையாளர்கள் அறை உள்ளிட்ட, ஏழு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
இதில், சுகாதாரத் துறை அமைச்சர் என்றமுறையில் விஜயபாஸ்கர் பங்கேற்க வேண்டும்; ஆனால், அவருக்கு முதல்வர் பழனிசாமி தடை போட்டு விட்டார். அதனால், அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தார். பகல், 12:00 மணிக்கு மேல், தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், மூத்த அமைச்சர்கள்
ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண் டார்.கூட்டத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தும், விஜயபாஸ்கர் பதவி விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர், மூத்த அமைச்சர்கள், கட்சியினர் நிர்ப்பந்தம் செய்வதால், விரைவில் அவர் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment