Thursday, April 13, 2017

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே வரும் மே மாதம் முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ஏப்ரல் 13, 04:15 AM

சென்னை,
பாதுகாப்பு ஆணையர் இதற்கான ஆய்வை நேற்று தொடங்கினார்.

முதல் சுரங்கப்பாதை

மெட்ரோ ரெயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.

இருந்தாலும், பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பயணிகளுக்கான ரெயில் சேவையை இந்தப்பாதையில் தொடங்க முடியும்.பாதுகாப்பு ஆணையர்

இந்தப்பாதைக்காக அரசிடம் பெறப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்களை, பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் அனுப்பி வைத்தனர். இந்த ஆவணங்களை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்தப்பாதையில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனேகரன் தன்னுடைய குழுவினருடன் நேற்று சென்னைக்கு வந்து ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–பயணிகளின் பாதுகாப்பு

கேள்வி:– திருமங்கலம் – நேரு பூங்கா இடையே எத்தனை நாள் ஆய்வு செய்ய உள்ளீர்கள்?

பதில்:– இன்று (நேற்று) தொடங்கி 2 நாட்கள் ஆய்வு செய்கிறோம். இதில் முதல்நாள் கோயம்பேடு– திருமங்கலம்– ஷெனாய் நகர் வரை 3.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2 வழிப்பாதையிலும், 2–வது நாளில் ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒரு வழிப்பாதையிலும் ஆய்வு செய்ய உள்ளோம்.

கேள்வி:– திருமங்கலம்– நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட பாதையில் உங்களுடைய ஆய்வு எவ்வாறு இருக்கும்?

பதில்:– பயணிகளின் பாதுகாப்பை மையமாக கொண்டு தான் எங்கள் ஆய்வு இருக்கும்.ஊழியர்களுக்கு அனுபவம்

கேள்வி:– பயணிகள் பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளப்படும் அம்சங்கள் எவை?

பதில்:– ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயிலிலும், ரெயில் நிலையத்திலும் வேண்டிய அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட்டு உள்ளதா?, ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பயணிகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது? தீ ஏற்பட்டால் அணைப்பதற்கான கருவிகள் உள்ளனவா? தீ தடுப்பு எச்சரிக்கை அலாரம் செயல்படும் விதம்?, குளிர்சாதன கருவிகள் செயல்படும் விதம், பராமரிக்கும் முறை, பாதுகாப்பு கருவிகளை கையாள்வது குறித்த போதிய அனுபவம் ரெயில் நிலையங்களில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.80 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை

கேள்வி:– சுரங்கப்பாதையில் ரெயிலை வேகமாக ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்யும் திட்டம் உள்ளதா?

பதில்:– நாளை (இன்று) பகல் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலும் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்ய உள்ளோம். அதற்காக தண்டவாளத்தின் உறுதி தன்மையை தீவிரமாக ஆய்வு செய்வோம்.

கேள்வி:– இயற்கை பேரிடர் காலங்களில் சுரங்கப்பாதையில் எந்த அளவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்?

பதில்:– மழை, வெள்ள பெருக்கு காலங்களில் மழைநீர் சுரங்கப்பாதையில் புகுந்துவிடாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் கருவிகளும் உள்ளன.அதிர்வுகளை தடுக்கும் வசதி

கேள்வி:– மேல்மட்ட பாதையிலும், சுரங்கப்பாதையிலும் ஆய்வு செய்வதில் என்ன வித்தியாசம் உள்ளது?

பதில்:– மேல்மட்ட பாதையில் மின்சாரம் மேல்பகுதியில் சற்று உயரத்தில் இருக்கும் இதனை உரசியப்படி ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் சுரங்கப்பாதையில் ரெயிலின் மேல்பகுதியில் சற்று அருகிலேயே மின்பாதை இருக்கும். எனவே இதனை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. சுரங்கப்பாதையில் காற்று வந்து செல்வதற்கான வசதி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு காப்பாற்றுவது, அதில் ஏற்படும் புகையை எவ்வாறு வெளியேற்றுவது, ஓடும் ரெயில் திடீரென்று நின்று விட்டால், பின்னால் வரும் ரெயிலை என்ன செய்வது?, அதேபோல் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்ன வசதி செய்யப்பட்டுள்ளது? குறிப்பாக ரெயில் மற்றும் ரெயில் நிலைய கதவுகள் முறையாக திறக்கப்படுகிறதா? என்பது குறித்தும் பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

கேள்வி:– கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு கீழே சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கும் போது அதிர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:– டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட பாதையில் ஒரு இடத்தில் லேசான அதிர்வு காணப்பட்டது. அது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் அதிர்வுகளை தடுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதால் இங்கு அதிர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.மே மாதம் ரெயில் போக்குவரத்து

கேள்வி:– திருமங்கலம்–நேருபூங்கா இடையே முதல் சுரங்கப்பாதையில் எப்போது ரெயில்கள் இயக்கப்படும்?

பதில்:– ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும் நாள் முடிவு செய்யப்படும். எப்படியும் மே மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அண்ணாசாலையில் விரிசல்

கேள்வி:– மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது அண்ணாசாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை வரும் காலங்களில் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில்:– பாதுகாப்பான முறையில் தான் பணிகள் நடந்து வருகிறது. மண்ணின் உறுதிதன்மையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை செய்து வருகிறோம். அண்ணாசாலையில் ஒரு சில இடங்களில் களிமண், வண்டல் மண் மற்றும் பாறைகள், கிராணைட் பாறைகள் மாறி மாறி இருக்கின்றன. இவற்றிற்கிடையில் பணிகளை செய்யும் போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய ஒப்பந்தக்காரர்கள் ஆட்களை நியமித்து உள்ளனர். இதன் மூலம் உடனுக்குடன் சீர்செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.45 கிலோ மீட்டர் தூரம்

பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக அலுவலர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:–

திருமங்கலம்–நேரு பூங்காவை இடையே மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேரு பூங்கா சென்டிரல் ரெயில் நிலையப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சின்னமலை –வண்ணாரப்பேட்டை இடையே பணிகளை முடித்து ரெயிலை இயக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக நடந்து வரும் 45 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து 2018–ம் ஆண்டு அனைத்து பாதைகளிலும் ரெயில்கள் இயக்கப்படும். நீட்டிப்பு செய்யப்பட்ட விம்கோ நகர் பகுதிகளில் 2019–ம் ஆண்டு பணிகளை முடித்து ரெயிலை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் தன்னுடைய குழுவினருடன் ஆய்வை தொடங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024