Thursday, April 13, 2017

பெட்ரோல், டீசலுக்கு நாள்தோறும் விலை நிர்ணயம் மே 1-ந் தேதி முதல் அமல்?

சோதனை ரீதியில் பெட்ரோல், டீசலுக்கு 5 நகரங்களில் நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த நகரங்களில் இந்த திட்டம், மே 1-ந் தேதி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 13, 04:15 AM
புதுடெல்லி,

நமது நாட்டில் கிட்டத்தட்ட 58 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களை, பொதுத்துறை நிறுவனங்களான இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி), பாரத் பெட்ரோலியம் கழகம் (பி.பி.சி.எல்.), இந்துஸ்தான் பெட்ரோலியம் கழகம் (எச்.பி.சி.எல்.) ஆகியவை நடத்தி வருகின்றன.

சர்வதேச அளவில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் 1-ந் தேதியிலும், 16-ந் தேதியிலும் பெட்ரோல், டீசல் விலையை இந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

தினந்தோறும் நிர்ணயம்

இந்த நிலையில் தங்கம், வெள்ளி போன்று பெட்ரோல், டீசல் விலையையும் தினந்தோறும் நிர்ணயிக்க இந்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு நாளிலும் நிலவுகிற சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் அமையும்.

5 நகரங்களில் அமல்

இந்த திட்டம் முதலில் சோதனைரீதியில் புதுச்சேரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜாம்ஷெட்பூர் (ஜார்கண்ட்), சண்டிகார் ஆகிய 5 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

அனேகமாக மே 1-ந் தேதி இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் விஸ்தரிப்பு

இது தொடர்பாக இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் பி. அசோக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படும். இது ஒரு மாதத்திற்குள் அமலுக்கு வரும். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்கிற நிலை உருவாகும்.

தினந்தோறும் விலை நிர்ணயம் செய்வது சாத்தியமானதுதான். ஆனால் முதலில் சோதனைரீதியில் செய்து பார்க்க வேண்டி உள்ளது. அதன் சாதக, பாதகங்களை ஆராய்வோம். அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் திட்டம் விஸ்தரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதன்மூலம் சர்வதேச போட்டியை இந்தியா சந்திக்க முடியும், அது இந்தியாவுக்கு பலன் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024