யார் இந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன்? ஏன் இந்த வன்முறை வெறி இவருக்கு...?!
JAYAPRAKASH T
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இருந்த 230 டாஸ்மாக் கடைகளில் 164 கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் வருமானத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த திருப்பூர் மாவட்டத்துக்குள் அடங்கிய பெரும்பாலான கடைகள் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதனால் 90 சதவிகித வருமானம் பாதிப்புக்குள்ளானது. இதனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் அதிகாரிகள் மாற்று இடம்தேடி பம்பரமாய்ச் சுழன்றனர். ஆனால், எங்கு சென்றாலும் டாஸ்மாக் கடைக்கு இடம்கொடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக தங்களுடைய எதிர்ப்பையும் தீவிரமாக வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் அகற்றப்பட்ட மதுபானக்கடை ஒன்றை திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் ஏப்ரல் 11-ம் தேதி அன்று டாஸ்மாக் நிர்வாகம் திறக்க இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் குழுமினர். காலை முதலே சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கினர். வீரியத்துடன் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 'இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட மாட்டாது' என அதிகாரபூர்வமாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம்" என மக்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டதால், மாலை 4 மணியளவில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். மதுபானக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதுடன், வெறியுடன் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் திருப்பூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி) பாண்டியராஜன்.
திருப்பூர் மாவட்ட உதவிக் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று ஆண்டிப்பட்டியில் பயிற்சி டி.எஸ்.பியாகப் பணியில் சேர்ந்த இவரின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம். பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றியவர். அதன்பிறகு திருச்சுழி, பழனி ஆகிய ஊர்களில் டி.எஸ்.பியாகப் பணிபுரிந்திருக்கிறார். இவர் பழனியில் பணியாற்றியபோது, கேரளாவுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த மணல் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர். பின்னர் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே திருப்பூரில் பணியமர்த்தப்பட்டார். தன் கீழ் வேலை செய்யும் காவலர்களை பலரது முன்னிலையில் கடினமான, தடித்த வார்த்தைகளால் திட்டக்கூடிய சுபாவம் கொண்டவர் என பாண்டியராஜனைப் பற்றி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
மாவட்டத்தின் எந்தப் பகுதியில் போராட்டம் என்றாலும் தன் படையினரோடு சென்று போராட்டக்காரர்களை பயமுறுத்தும் வகையில் மிரட்டலான தொனியிலேயே பேசுவார். சில மாதங்களுக்குமுன் பல்லடம் சுல்தான்பேட்டைப் பகுதி டாஸ்மாக் பிரச்னையில் இதேபோன்ற போராட்டம் நடைபெற்றபோதும், அங்கு சென்று போராட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் பேசியவர். ஆனால், போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்தார்.
ஆனால், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவர் நடந்துகொண்ட விதம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தடியடி நடத்தியதும் அங்கிருந்து கலைந்து சென்ற பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்து, தன் முழு பலத்தையும் அந்தப் பெண்களின்மீது காட்டியிருக்கிறார். எதிரே வந்த பெண்ணின் கன்னத்தில் பாண்டியராஜன் அறைந்ததால், காயம் அடைந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மக்களின்மீது, இந்த அளவுக்கு உக்கிரமான வன்முறையை காவல்துறை ஏன் கட்டவிழ்த்து விட வேண்டும்? பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்றால், அனைவரையும் கைது செய்திருக்கலாமே? அதிரடிப்படையை அழைத்து வந்து அடிதடியில் ஈடுபட வைத்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு, பேருந்துகளை வரவழைத்து அனைவரையும் கைது செய்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?
காலையிலிருந்து 9 மணிநேரம் கடந்தும் போராட்டம் நடத்திய மக்கள், அந்த உறுதியின் மூலம் தங்களின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தாலும் அங்கிருந்துகொண்டே டாஸ்மாக் ஒழிக என்ற கோஷத்தை அவர்கள் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். எனவே, இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தருணத்திலும் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது என்பதையே போராட்டக்காரர்கள்மீதான காவல்துறையினரின் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. மக்கள் தெருவுக்கு வந்து போராடி, அதன்மூலம் அவர்களின் கோரிக்கை நிறைவேறினால், எல்லா ஊர்களிலும் மக்கள் போராட்டம் நடத்தத் தயாராகிவிடுவார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற முனைப்பு ஆளும் வர்க்கத்துக்கு அதிகமாகவே உள்ளது. அதற்கு, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடந்தையாக இருந்துள்ளார். மக்கள் கிளர்ந்து எழுந்து ஒரு போராட்டத்தை நீண்ட நாட்கள் நடத்தினால், இந்த அரசு முதலில் அதை முடக்கவே நினைக்கிறது. இல்லையேல் வேறு ஒரு புதிய போராட்டத்துக்கு அரசே வழிவகை செய்து கொடுத்துவிட்டு, அதற்குமுன் நடந்த போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கத் துடிக்கிறது.
ஒருவேளை மக்கள் ஒன்றிணைந்து போராடி தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடச்செய்துவிட்டால், தினந்தோறும் சரக்கடித்து விட்டு குடிபோதையில் பைக் ஓட்டிவரும் குடிமகன்களை இனி சிக்னலில் மடக்கி, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தமுடியாமல் போய்விடுமே என்ற அச்ச உணர்வில் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தினார்களா?
கண்ணியமான முறையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை, யாருடைய உயர்மட்ட தூண்டுதலின் பேரில் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் சீர்குலைத்தார்? யார் இந்தப் பாண்டியராஜன்? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்ட திமுக பொருளாளராக இருப்பவர் மணி முருகன். இவர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு மிகவும் நெருக்கமானவராவார். டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது அத்துமீறிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், மணி முருகனின் நெருங்கிய உறவினர். மேலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கும்போதெல்லாம், பாண்டியராஜன் அங்கு சென்று பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவாராம். அந்த வகையில் கார்டன்வட்டாரத்துடன் பாண்டியராஜன் நெருக்கமாகி, தனது செல்வாக்கை உறவினர் மணி முருகன் மூலம் ஐ. பெரியசாமிக்கும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இல்லாதபோதிலும் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்ததற்கு, பாண்டியராஜன் ஏற்படுத்திக்கொடுத்த கார்டன் தொடர்புதான் என்று தி.மு.க-வினரே தெரிவிக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்த பாண்டியராஜன், தற்போது யாருடைய தூண்டுதலின்பேரில், போராட்டக்காரர்கள்மீது இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தை நடத்தினார் என்பது தெரியவில்லை. எல்லாம் காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்கே வெளிச்சம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
No comments:
Post a Comment