நீட்' விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்
பதிவு செய்த நாள் 13 ஏப் 2017 23:12
'நீட் தேர்வு விண்ணப்பத்தில், புகைப்படம் மற்றும் பெற்றோர் பெயரில் பிழையிருந்தாலும், விண்ணப்பம் ஏற்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடக்கிறது; 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்., 5ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்த நிலையில், தற்போது, விண்ணப்ப பரிசீலனை நடந்து வருகிறது.
விண்ணப்ப பதிவில் பிழைகளை திருத்த, ஏப்., 12ல், அவகாசம் தரப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
அதில் கூறியுள்ளதாவது: தேர்வுக்கான விண்ணப்ப பதிவில், விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் பெயர் மற்றும் தேதி தவறாக பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அதேபோல், தாய், தந்தை பெயரை மாற்றி பதிவு செய்ததாக, பலர் தெரிவித்துள்ளனர்; அவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்படும். தேர்வில் வெற்றி பெற்று, கவுன்சிலிங் சென்றால், அப்போது உரிய ஆதாரங்களை காட்டி, மாணவர் சேர்க்கை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment