மதுரை: பாஸ்போர்ட்டில் சில மாற்றம் செய்து வழங்குவது தொடர்பான வழக்கில், 'குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. மனுவை பாஸ்போர்ட் அதிகாரி சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி அப்துல் ரசீக் தாக்கல் செய்த மனு: எனக்கு 2012 ல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பஹ்ரைனில் வேலை செய்தேன். பின் திருமணம் நடந்தது. நான் திருமணம் ஆனவர் என்ற தகுதி நிலையை பாஸ்போர்ட்டில் பதிவு செய்து வழங்கக்கோரி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். குடும்ப வன்முறைச் சட்டத்தில் மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,'உங்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதா?,' என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இல்லை என பதில் அளித்தேன். எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அப்துல் ரசீக் மனு செய்திருந்தார்.
நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவு: குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. போலீசாரின் விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதவரை, குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அது மனுதாரர் விவகாரத்தில் பொருந்தும்.சட்டத்திற்குட்பட்டு, தகுதி அடிப்படையில் மனுவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment