Monday, April 3, 2017

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?

By DIN  |   Published on : 03rd April 2017 03:31 AM 
card
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நவீன மின்னணு குடும்ப அட்டைகளைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்தாள் இணைப்புடன் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில், போலி குடும்ப அட்டைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலி அட்டைகளை ஒழிக்கவும் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்தவும் நவீன கையடக்க அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஏப்.1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பயன்படுத்துவது எப்படி: இந்த அட்டையை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த அட்டையை பெற்றதும் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சதுர பெட்டி வடிவிலான நவீன இயந்திரம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

அந்த இயந்திரத்துடன் பில் போடுவதற்கும் தனியாக ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றதும் மின்னணு குடும்ப அட்டையை சிறிய சதுர பெட்டி வடிவ இயந்திரத்தின் மேலே உள்ள வெள்ளை நிற விளக்கு வெளிச்சத்தில் வைத்தால் போதுமானது. உடனே அந்த இயந்திரம் செயல்படத் தொடங்கும்.

மற்றொரு இயந்திரம் மூலம் அந்த அட்டைக்கான பொருள்கள் ஒதுக்கீடு அளவுக்கு விற்பனையாளர்கள் பில் போடுவார். அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள்களின் விவரம் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டையில் பதிவாகும்.

இது தொடர்பான விவரங்கள் செல்லிடப்பேசியிலும் குறுஞ்செய்தியாக அறிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024