Monday, April 3, 2017

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்

By DIN  |   Published on : 02nd April 2017 11:56 PM  

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்பட 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்களை (டீன்) தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான விவரம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் பொறுப்பு இயக்குநராகவும் பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.நாராயண பாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் 2020-ஆம் ஆண்டு வரை நீடிப்பார்.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறைத் தலைவரும் பொறுப்பு முதல்வருமான டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் அந்தக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதாமணி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல்துறை இயக்குநர் டாக்டர் கோபிநாத் பதவி உயர்வு வழங்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை(ஏப். 3) பொறுப்பேற்றுக்கொள்கின்றனர்.

கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகப் பணிகள் இனி தொய்வின்றி நடைபெறும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நியமிக்கப்படுவார் எனவும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான பட்டியலில் மூன்று மூத்த மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் விரைவில் இயக்குநர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024