Saturday, April 15, 2017

வருமான வரித் துறை சோதனை விவகாரம்: சிபிஐக்கு மாற்ற உள்துறை தீவிர பரிசீலனை

By DIN  |   Published on : 15th April 2017 01:05 AM  |
cbi-office
தமிழகத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்திய விவகாரத்துக்கு பிந்தைய விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற மத்திய உள்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 7-ஆம் தேதி சுமார் 50 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், ரொக்கம், நகை போன்றவற்றின் விவரங்களை வருமான வரித் துறையினர் சேகரித்து அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5.50 கோடி ரொக்கம் புதிய ரூ.2000 நோட்டுகளாக இருப்பதால் அவ்வளவு பெரிய தொகை தனி நபர்களின் வீடுகளில் எவ்வாறு பதுக்கப்பட்டது? இந்தத் தொகை யார் மூலம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாக வருமான வரித் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், சோதனையின் போது சுமார் ரூ.90 கோடி அளவிலான பரிவர்த்தனைக்கான குறிப்புகளும் வருமான வரித் துறையினருக்குக் கிடைத்துள்ளது.

இந்தச் சோதனை விவரத்தை சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை மண்டல கிளை அதிகாரிகளுடன் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை பகிர்ந்து கொண்டனர்.

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்குப் பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரூ.2,000 நோட்டுகள் பதுக்கல் விவகாரத்தை பிரத்யேகமாக சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, அமைச்சர், அதிகாரிகள், தனி நபர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் தொடர்புடைய விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாகக் கருதப்படும் நிகழ்வை மட்டும் வருமான வரித் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இதில் ரூ.2,000 புதிய நோட்டுகள் கிடைத்தது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மேலிடத்தை வருமான வரித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்துக்கு வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறையை மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...