பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ
By DIN | Published on : 15th April 2017 04:07 AM
தொடக்க விழாவில் பங்கேற்ற இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், எம்.ஆட்டோ நிறுவனர் மன்சூர் அலிகான் ஆகியோருடன் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்.
பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, தமிழகத்தில் முதல் முறையாக "எம்.ஆட்டோ' என்ற பெயரில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண் முதல் கட்டமாக 50 ஆட்டோக்களைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து "எம்.ஆட்டோ' நிறுவனர் ஏ.மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் ஆட்டோக்களும், தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்களும் ஓடுகின்றன. சென்னையில் 75,000 ஆட்டோக்கள் உள்ளன. போக்குவரத்து தேவையில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தத் தொழிலை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.
கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சிகள் வழங்கி, ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொடுத்து உதவுகிறோம். இதன் மூலம் அந்தப் பெண்கள் தொடக்கத்தில் தினமும் ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிக்க முடியும்.
எப்படித் தொடர்பு கொள்வது? ஆட்டோவில் பயணிக்க தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்த சேவை விரைவில் தொடங்கப்படும். சென்னையில் உள்ள மக்கள் இந்த ஆட்டோ சேவையைப் பெற காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை
65103 65103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதைத் தொடர்ந்து வரும் மே 1-ஆம் தேதி முதல் 4321 4321 என்ற எண்ணில் கால் சென்டரையும், எம்.ஆட்டோ செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு சேவையைப் பெறலாம்.
அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்பது குறித்து பிரமாண்ட விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.
பயணிகளின் நன்மதிப்பைப் பெறுவோம்: இது குறித்து பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மாலா, மகாலட்சுமி ஆகியோர் கூறுகையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் எங்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டுவோம்.
இதன் மூலம் எங்களின் தேவைகளை நாங்களே கவனித்துக் கொள்ள முடியும். கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்களின் நன்மதிப்பைப் பெறுவதுடன் அவர்களுக்கு உரிய பயண பாதுகாப்பை வழங்குவோம் என்றனர்.
விழாவில் இந்தியாவுக்கான பெண் தொழில்முனைவோர் தூதர் மதுசரண், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி கம்ரான்கான், சமூக சேவகர் விஜயலட்சுமி தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment