Saturday, April 8, 2017

பெற்றோரைப் பேணல்!

By ஆசிரியர்  |   Published on : 07th April 2017 01:23 AM  |   
பெற்றோர், முதியோர் நலன் பேணுவது என்பது இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது. நமது புராண, இதிகாசங்கள் மட்டுமல்ல, இந்திய இலக்கியங்கள் அனைத்துமே, பெற்றோருக்கு மரியாதை செய்வதை இறைவனுக்குச் செய்யும் மரியாதையைவிட மேலானதாகவும், முக்கியமானதாகவும் வலியுறுத்துகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உலகமயச் சூழலை ஏற்றுக்கொண்ட பிறகு, பெற்றோரைப் பேணல் என்கிற பண்பு அதிவிரைவாகக் குறைந்து வருகிறது. அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களும், வயோதிகத்தைத் தனியாகக் கழிக்கும் பெற்றோரின் நிலையும் மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளன.
இத்தகைய போக்குக்கு பெற்றோர் மீது பிள்ளைகள் கொண்ட பாசம் குறைந்துவிட்டது என்றோ, மேலை நாடுகளைப்போல வயதுக்கு வந்துவிட்டால் உறவை அறுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்துவிட்டது என்றோ அர்த்தமில்லை. படித்துப் பட்டம் பெற்று, வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் பிள்ளைகள், அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கி விடுவதும் ஒரு காரணம். அவர்களில் பலர் பெற்றோருக்குப் பணம் அனுப்பி அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதும் இல்லை.
அதே நேரத்தில், மிகுந்த சிரமத்துக்கிடையில் தங்களது குழந்தைகளைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்துவிட்டு வயோதிகத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் பெற்றோரின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருக்கிறது. தனது மனைவியும், குழந்தைகளும் மட்டுமே தனது குடும்பம் என்றும், பெற்றோரைப் பேணல் தனது கடமையல்ல என்றும் நினைக்கும் பலரும் இருக்கவே செய்கிறார்கள்.
60 வயதைக் கடந்த முதியோர் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இவர்களில் 5 விழுக்காட்டினர் தனியாக வாழ்கிறார்கள். மனைவி அல்லது கணவருடன் வாழும் 60 வயதைக் கடந்தவர்கள் 9.3 விழுக்காட்டினர். குழந்தைகளின் பராமரிப்பில் வாழும் பெற்றோர்கள் 35.6 விழுக்காட்டினர்.
இந்தியாவில் ஆறில் ஒரு முதியவர் போதிய சத்தான உணவு பெறுவதில்லை; மூன்றில் ஒருவருக்குப் போதிய மருத்துவ கவனிப்பு கிடைப்பதில்லை; இரண்டில் ஒருவருக்குக் குடும்பத்தில் போதிய கவனிப்போ, மரியாதையோ தரப்படுவதில்லை. இதுதான் இன்று நகர்ப்புற இந்தியாவில் வாழும் முதியோர்களின் நிலைமை.
முந்தைய மன்மோகன் சிங் அரசு, 'பெற்றோர் - முதியோர் நலச் சட்டம் 2007' என்று ஒரு சட்டத்தை இயற்றி முதியோர் தன்மானத்துடனும் நிம்மதியாகவும் தங்களது வயோதிகத்தைக் கழிக்க சட்டப் பாதுகாப்பு வழங்க முற்பட்டது. அந்தச் சட்டப்படி, முதியோரையும் பெற்றோரையும் பேணுவது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் கடமையாக்கப்பட்டது.
இப்போது, பெற்றோர் - முதியோர் நலச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர இருக்கிறது நரேந்திர மோடி அரசு. இப்போது, பெற்றோரின் நலம் பேணுவதற்காக பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கும் தொகையாக ஆணையம் அதிகபட்சமாக ரூ.10,000 தான் உத்தரவிட முடியும். முதியோர் அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும், அதிகரித்துவிட்ட மருத்துவச் செலவுகள், அன்றாடச் செலவுகள் காரணமாக இந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அவற்றின் கோரிக்கையை ஏற்று மத்திய சமூகநல அமைச்சகம் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறது.
சமூகநலத் துறைச் செயலாளரின் தலைமையில், முதியோர் அமைப்புகள், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தேசிய சட்ட ஆணைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று தில்லியில் கூட்டப்பட்டது. அதில், வசதியுள்ள பிள்ளைகள், அதிகபட்சம் ரூ.10,000 தந்தால் போதும் என்பதுடன், அவர்களைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த பெற்றோரை சரியாகப் பராமரிக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பிள்ளைகளின் வருமானத்தின் அடிப்படையில்தான் பெற்றோருக்கு அவர்கள் வழங்கும் பேணுகைத் தொகை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வரம்பு விதிக்கப்படக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல, முதியோர் இல்லங்களையும் முதியோருக்கு அவர்கள் வீட்டிற்கே வந்து தனிப்பேணுகை செய்யும் நிறுவனங்களையும் நெறிப்படுத்தவும், தரவரிசைப்படுத்தவும் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. பரவலாகவே, தனியாக வாழும் முதியோர் பலர் தாக்கப்படுவதும், பணத்துக்காகக் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருவதால், முதியோர் இல்லங்களில் வாழாமல் தனித்து வாழும் முதியோர் குறித்தும் பெற்றோர் - முதியோர் நலச் சட்டத்தில் சில பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் அளித்த தீர்ப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. தனிக்குடித்தனம் வர மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்திய மனைவியை விவாகரத்துக் கோரிய வழக்கில், பெற்றோருடன் வாழ வேண்டும், அவர்களை முதுமையில் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு மகன் விரும்பினால் அதில் தவறு காண முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.
அது ஒருபுறம் இருந்தாலும், அரசும், நீதித்துறையும் முதியோர் குறித்தும், வயதான பெற்றோர் குறித்தும் கவலைப்படத் தொடங்கி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. முதியோர் தன்மானத்துடன் வாழவும், அவர்களை முறையாகப் பேணவும் வழிகோலாமல் இருந்தால் அது நமது பண்பாட்டுக்கே இழுக்கு!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024