Saturday, April 8, 2017

தையல் வாழ்க பல்லாண்டு!

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 08th April 2017 01:19 AM
Hajakani
ஒரு சிறிய செய்தியாக அது வெளிவந்திருந்தாலும், அச்செய்தியளித்த அதிர்ச்சியும், கவலையும், தேசத்தின் மனசாட்சியை உலுக்குவதாக இருக்கிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கொரட்டகெரேவைச் சேர்ந்த ராதாமணி என்ற 25 வயது பெண்ணின் சாவுதான் நமது அறங்கள் மற்றும் அதைக் காப்பதற்கான சட்டங்கள் ஆகியவற்றின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான ராதாமணியின் கணவர் புகைப்படங்களை மாட்டுவதற்குச் சட்டம் அடித்துத் தரும் சாதாரணத் தொழிலாளி. ஆண் குழந்தை ஒன்று வேண்டும் என்ற நிர்ப்பந்த ஆவலில் அந்தப் பெண் கருவுறுவதும், பிறகு வயிற்றில் வளர்வது பெண் சிசு என்று சட்ட விரோதமாக அறிந்து கொண்டு அதைக் கலைப்பதுமாக, 12 முறை இப்பெண்ணுக்குக் கருக்கலைப்பு நடந்துள்ளது.
அதற்குப் பின்னர் மீண்டும் கருவுற்ற ராதாமணிக்கு அதுவும் பெண் சிசுவாகவே அமைந்திட கருக்கலைப்பு செய்திருக்கிறார். அப்போது தொடர்ச்சியான கருக்கலைப்பால் உடல் நலிந்திருந்த அப்பெண் உயிரிழந்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையிலும் இந்தச் சம்பவம் எதிரொலித்துள்ளது.
ஆண் குழந்தைகள் மீது அதீத ஆவலும், பெண் குழந்தைகள் குறித்து பெரும் பீதியும், சமூகத்தில் சீமைக் கருவேல மரங்களைப்போல் நிலைகொண்டு, பெண்களின் வாழ்வை சீரழிப்பதற்கு, ஆணிவேரான காரணமாய் அமைந்திருப்பது எதுவென்று ஆராய வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
பெண் சிசுக் கொலை என்பது நம் மண்ணில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும், தொன்று தொட்டு நிலவி வந்திருப்பதை வரலாற்றுத் தொலைநோக்கி வழியே காண முடிகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் பெண் சிசுக்களை உயிரோடு புதைக்கும் கொடுமையை உற்சவம் போல் கொண்டாடி உவகை அடைந்தனர்.
பெண் குழந்தைகளைப் பெறுவதை சாபக் கேடாகவும், அதைப் புதைப்பதைப் பெருமிதமாகவும் அன்றைய அரபு நாட்டின் மரபு கருதியது.
நபிகள் நாயகம் சளைக்காமல் ஆற்றிய சத்தியப் பரப்புரையும், பெண்மையின் கண்ணியம் பேணக் கொண்டு வந்த கடுமையான சட்டங்களும், இந்த மூர்க்கத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. எவர் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, சிறப்பாக வளர்க்கிறாரோ, அவரும், நானும், சுவனத்தில் இவ்வாறு இணைந்திருப்போம் என்று ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்.
திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு மணமகன் அவள் விரும்பும் மணக்கொடையைத் தர வேண்டும் என்ற சட்டத்தால், இன்றும் அரபு நாடுகளில் மணமாகாத ஆண்களுக்குத் திருமணக் கடன் வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பிறந்த வீடுகளில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக குலவை சத்தம் கேட்கிறது.
வரலாற்றை நினைவூட்டுவதற்காக இன்றைய மக்காவில் பெண் குழந்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தை மட்டும் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற முழக்கத்திற்கு, பெண்மையை இழிவு செய்யும் வழக்கமே காரணமாக அமைந்தது.
சிசுக் கொலை, பால்யத் திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, வன்பகடி (ஈவ்டீசிங்), பாலியல் கொடுமை எனப் பெண்ணினத்தைக் குறி வைத்து ஏராளமானக் கொடுமைகளும் அவற்றைத் தடுப்பதற்கு இயற்றப்பட்ட ஏகப்பட்ட சட்டங்களும் நம்நாட்டில் நடைமுறையில் இருந்தபோதிலும், மகளிரின் கண்ணியமான வாழ்வுக்காக எங்கெங்கும், என்றென்றும் ஏதோ ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
ஒரு பெண் நம் மண்ணில், பிறக்கும் முன் கருக்கொலையையும், பிறந்த பின் சிசுக்கொலையையும் பிரியமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் ஆணவக் கொலையையும் கடந்தே இங்கு உயிர் தரிக்க முடிகிறது என்பது கசப்பான உண்மை.
கருப் பருவம், சிசுப் பருவம், இளமைப் பருவம் என்ற இனிய பருவங்களை மரணத்தின் நிழலில் மங்கையர் கழிப்பது எவ்வளவு துயரமானது. எத்தனை வெட்கப்படத்தக்கது?
ஆணும், பெண்ணும் வாழ்வின் சரிபாதியாவர். சரிபாதியான இருவரிடையே சமநீதி இருக்க வேண்டும். கருக்கொலைகள் அதிகரித்து, பெண்சிசுக்களின் பிறப்பு வெகுவாகத் தடுக்கப்பட்டு வந்தால், அதன் விளைவு என்னாகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சமூகத்தில் நிம்மதி மறைந்து போகும். வன்மங்கள் அதீதமாய் வளரும்.
1994-ஆம் ஆண்டு கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவிக்கத் தடை விதித்துச் சட்டம் இயற்றப்பட்டது (Pre conception and pre-natal Dignostic Techniques Act (Prohibition sex selection Act). இச்சட்டப்படி கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறுவது குற்றம். ஆனால் 'ஸ்கேன் சென்டர்கள்' கூறாமல் இருக்கிறார்களா? கூறாமல் இருந்திருந்தால் கர்நாடக மாநிலத்தில் அந்தப் பெண் எப்படி 12 முறை கருக்கலைப்பு செய்திருப்பார்?
பாலினத்தை சூசகமாகச் சொல்லும் முறை ஒன்று உள்ளது என்று ஓர் அதிர்ச்சி செய்தியைப் பகிர்ந்து கொண்டார் பிரபல குழந்தை நல மருத்துவர் ஒருவர். ஸ்கேன் ரிப்போர்ட்டை, குறிப்பிட்ட ஒரு கிழமையில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றால், பெண் சிசு; வேறு ஒரு கிழமையில் என்றால் ஆண். இப்படி ஒவ்வொரு மையமும் ஒரு வகையான சங்கேத மொழியைப் பின்பற்றுகிறதாம். எவ்வளவு வேதனைக் குரியது.
இந்தியாவில் ஆண் சிசுவுடன் ஒப்பிடுகையில் பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் 75% அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
100 ஆண் குழந்தைகளுக்கு 105 பெண் குழந்தைகள் என்ற உலக சராசரி, இந்தியாவில் மட்டும் 100 ஆண் குழந்தைகளுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள் என்ற வகையில் உள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 2,000 பெண் சிசுக்கள் கருக்கொலை செய்யப்படுவதாக ஐ.நா.வின் அறிக்கை அபாயத்தை அறிவிக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பான வழியில் பாலினத்தை அறிந்து, மருத்துவ அறங்களுக்கு புறம்பான வழியில் பெண் கருவை அழிப்பது அடித்தட்டு மக்களிடம் அதிகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதில் கர்ப்பிணிகள் கொடூரமாக உயிரிழக்கும் கொடுமையும் தொடர்கிறது.
அதையும் மீறி பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு கள்ளிப் பால் போன்ற எத்தனையோ கொலைவழிகள். இதில் வேடிக்கை என்னவெனில் பெண்ணின் பெருமை பேசும் இலக்கியங்கள் தமிழில்தான் ஏராளமாக உள்ளன.
'கருத்தம்மா' என்ற திரைப்படம் பெண்சிசுக் கொலைக்கெதிராக எடுக்கப்பட்டு, தேசிய விருதும் பெற்றது.
அண்மையில், பெண் குழந்தைகளுக்குப் பெருமை சேர்க்கும் 'டங்கல் யுத்தம்' என்ற இந்திப் படம் நமது நாடாளுமன்றத்திலேயே திரையிடப்பட்டது.
பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுகள்.
சமூகம் சுமத்திய சடங்குகள்.
ஆண் மகன் கடைசி காலத்தில் காப்பாற்றுவான், பெண் வேறு வீட்டிற்குப் போகக் கூடியவள் என்ற கருத்தியல்.
வம்ச விருத்திக்கு ஆண் மகனே அடையாளம் என்ற நம்பிக்கை.
இறுதிச்சடங்கை ஆண் மகனே நிறைவேற்ற முடியும் என்ற நிலை.
இவையாவற்றையும் தாண்டி, திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பின்னரும் தொடரும் வரதட்சணைக் கொடுமைகள்.
இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கு எதிரான உளவியலை சமூகத்தில் ஆழமாகக் கட்டமைத்துள்ளன.
அதனால்தான் நவீன காலத்திலும் இந்த நாசகரப் படுகொலைகள் தொடர்கின்றன.
பெண்ணுரிமை காக்கும் ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யாவும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
தாய்மொழி, தாய்நாடு என்று தகைமையுறச் சொல்கிறோம். நதிகளுக்கெல்லாம் பெண் பெயரே சூட்டியுள்ளோம். ஆனால் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் தொடருவோம் என்பது பேரிழுக்கு அல்லவா?
1962-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ராணி சம்யுக்தா' என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல்.
'சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே,
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயா?'
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வாழவிட மாட்டாயா? என்ற கேள்வி இன்றும் தொடர்வது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
மகளிரைக் கண்ணியமாகக் கொண்டாடும், மன எழுச்சியை சமூகத்தில் விதைப்போம். பெண்ணில்லையேல் மண்ணில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024