Wednesday, April 19, 2017

காத்திருக்கும் பேரிடர்!

By ஆசிரியர்  |   Published on : 19th April 2017 01:31 AM  |    
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அனல் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும், வானிலை ஆய்வு மையமும் இது குறித்த எச்சரிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பி இருக்கின்றன. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் ஏறத்தாழ 20 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. கடலோர மாவட்டங்கள் தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் இப்போதே அனல் காற்று வீசத் தொடங்கிவிட்டது. நண்பகல் நேரத்தில் வெளியே செல்வது, திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்துகின்றனர்.
வட இந்தியாவில், குறிப்பாக, மேற்கு, மத்திய, வட மாநிலங்களில் கோடையின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் இப்போதே அனல் காற்றுக்கு இருவர் பலியாகி இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மட்டுமல்ல, குஜராத், ஒடிஸா, ஹரியாணா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பத்தை இந்த ஆண்டு அனுபவிக்கின்றன. அங்கெல்லாம் மரணம் எதுவும் இல்லை என்றாலும், ஆங்காங்கே வெப்பத்தின் பாதிப்பால் மயக்கம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வழக்கத்தைவிட அதிகமான கோடை வெப்பத்தை இந்த ஆண்டு இந்தியா எதிர்கொள்ளப்போகிறது என்று அறிவித்திருக்கிறது, இந்திய வானிலை ஆய்வு மையம். அதிக வெப்பத்தாலும், அனல் காற்றாலும் பாதிக்கப்படக்கூடிய 50 மாவட்டங்களை அடையாளம் கண்டு அறிவித்திருக்கிறது. வழக்கத்தைவிட 7 அல்லது 8 டிகிரி அதிகமான வெப்பத்தை மேலே குறிப்பிட்ட மாவட்டங்கள் இந்த ஆண்டு எதிர்கொள்ளும் என்றும், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்த அளவுக்கு மோசமான கோடைக்காலம் இருந்ததில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கத்தைவிடக் குறைவான பருவ மழையும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து காணப்பட்டு வரும் வறட்சியும், இந்த ஆண்டு கோடையை மேலும் கடுமையாக்கிவிட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றம், கடல் வெப்பம் அதிகரிப்பு, காடுகள் அழிக்கப்படுதல் போன்றவையே கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையமும், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் வெப்பம் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு சில செயல்திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. பொது இடங்களில் பரவலாகக் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது, பள்ளி, அலுவலக நேரங்களில் மாற்றம் செய்வது, மருத்துவமனைகளில் பெண்கள் - குழந்தைகள் இருக்கும் பகுதிகளைக் கீழ்த்தளங்களுக்கு மாற்றுவது, ஏழைகளுக்கும் தெருவோரம் வசிப்பவர்களுக்கும் மின்விசிறி, குடிதண்ணீருடன் கூடிய பகல்நேரத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்வது, பொதுமக்கள் மத்தியில் வெப்பம் குறித்தும் அதை எதிர்கொள்ளும் வழிகள் குறித்தும் விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்துவது உள்ளிட்ட பல செயல்திட்டங்களைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.
கடுமையான கோடையின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் அபாயம் அதிகம். கோடைக் காலத்தில் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். உடலில் நீர்ச்சத்து குறையும்போது, பலவீனம் ஏற்பட்டு மயக்கமும், உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் அது மரணம் வரை இட்டுச் செல்லும் அபாயமும் உண்டு. ஆங்காங்கே நீர்ச்சத்து அதிகரிப்புக்காக உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் பாக்கெட்டுகள் கிடைக்க வழிவகை செய்வது அவசியம்.
ஏப்ரல் மாதமே கடுமையான வெயில் தொடங்கி இருக்கும் நிலையில், மே, ஜூன் மாதங்களில் அது உச்சம் தொடும்போது ஏற்பட இருக்கும் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டும் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்கிற நிலைமை ஏற்பட்டால், இந்தியா மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டிவரும். விவசாயம் பொய்த்து, அது தொடர்பான எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டு கடுமையான வறட்சியாலும் பஞ்சத்தாலும் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிக்கப்படலாம்.
கோடையின் தாக்கம் ஒருபுறம் இருக்க, இதன் இன்னொரு விளைவாகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டும். குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் வழக்கத்தைவிட நீர் மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. ஆற்றிலும், கிணறுகளிலும், ஏரிகளிலும்கூட நிலைமை அதுதான். குடிதண்ணீருக்கும், மின் உற்பத்திக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படலாம். இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும் இப்போதே திட்டமிடத் தொடங்கியாக வேண்டும்.
நகரங்களில் அளவுக்கதிகமான மக்கள் பெருக்கம் ஏற்பட்டிருப்பதால், கடுமையான கோடையாலும், குடிதண்ணீர் தட்டுப்பாட்டாலும் மக்கள் கொந்தளிப்பு அடையாமல் எப்படி சமாளிப்பது என்பதை இப்போதே அரசுகள் யோசித்தாக வேண்டும். மிக அதிகமான மின்சாரத் தேவை ஏற்படுவதையும் மின்கசிவினால் ஏற்படும் மின்தடை, தீவிபத்து ஆகியவற்றையும் அரசு எதிர்கொண்டாக வேண்டும்.
தண்ணீரும், மின்சாரமும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க என்ன செய்யப்போகிறது அரசு? இப்படியொரு சூழலில், அரசியல் நிலையற்றத்தன்மையும் ஏற்படுமானால்... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024