Wednesday, April 19, 2017

அரசாங்கமா... அவமானமா? - ஆனந்த விகடன் தலையங்கம்

 விகடன் டீம்

தமிழக மக்கள், மோசமான ஒரு காலகட்டத்தை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கோடை வெப்பத்தால் புழுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சமும் மக்களைத் தாக்குகிறது. மக்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய அரசாங்கமோ, குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில்தான் மும்முரமாக இருக்கிறது. டாஸ்மாக்குக்கு எதிராக வீதிக்கு வந்து மக்கள் போராடினால், போலீஸைக் கொண்டு அடக்குகிறது அரசு. அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் இல்லாமல் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் காலியாகவே இருப்பதால், மக்கள் தினம் தினம் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இன்னொரு புறம், தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வற்புறுத்தி மூன்றுகட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
 
`நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டதா, சட்டமன்றத்தில் அனைத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதங்கள் எப்போது' என எதுவுமே தெரியவில்லை. அரசாங்கமே கோமா நிலையில் சிக்கியிருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாகும் அளவுக்கு அவலநிலை. ஆனால், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு இதுவரை நிவாரணத்தொகையைக்கூட முழுமையாக வழங்கவில்லை. `விவசாயிகளின் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?' என உச்ச நீதிமன்றமே ஆதங்கத்தோடு கேட்கும் அளவுக்குத்தான் தமிழக அரசின் `அக்கறை' இருக்கிறது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடங்கி, எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கும் கடை அடைப்புப் போராட்டம் வரை அடுத்தடுத்து நடத்தப்படும் போராட்டங்கள்கூட இம்மி அளவும் தமிழக அரசைச் சலனப்படுத்தவில்லை. 

உள்ளாட்சித் தேர்தல் வந்தால் மக்களைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தேர்தலை முடிந்த அளவுக்குத் தள்ளிப்போட முயன்றுகொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலகாரணம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பலரும் பதவிச் சண்டையிலும் பணச் சண்டையிலும் மும்முரமாக இருப்பதுதான். 
மாண்புமிகு முதலமைச்சரே... மாட்சிமை தாங்கிய அமைச்சர்களே... வணக்கத்துக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே... உங்களில் பலர், தலைமைச் செயலகத்துக்கும் வருவதில்லை; தொகுதிப் பக்கமும் வருவதில்லை. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதுகூட பல சமயங்களில் மக்களுக்குத் தெரிவதில்லை. மதுக்கடைகள் தொடங்கி விவசாயிகள் பிரச்னை வரை எந்த விஷயத்திலும் அரசின் நிலைப்பாடு என்ன என்றுகூட நீங்கள் சொல்வதில்லை. இந்த ஆட்சி இப்படியே தொடர்ந்து நடைபெற்றால், அது தமிழகத்துக்கு மேலும் மேலும் அவமானத்தை மட்டுமே பெற்றுத் தரும். 

தயவுசெய்து உங்களின் கழ(ல)கப் பிரச்னைகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மக்களின் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துங்கள். இல்லையேல், `இந்த அசிங்கம்பிடித்த அரசாங்கம் எப்போது தொலையும்?' என்ற மனநிலைக்கு மக்களை நீங்களே தள்ளிவிடுவீர்கள். எச்சரிக்கை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024