Wednesday, April 19, 2017

கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்

SYED ABUTHAHIR A


“அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.



ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சசிகலாவுக்கு கட்சி பதவி தரவேண்டும் என்று திவாகரன் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியபோது தான் சசிகலாவின் குடும்பம் அ.தி.மு.க-வின் தலைமை பதிவிக்கு வந்துவிடும் என்ற கணிப்பு அ.தி.மு.கவினர் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறித்தியதன் பின்னணியிலும் சசிகலாவின் குடும்ப உறவுகளே இருந்தார்கள். பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவியின் மீது சசிகலாவின் பார்வையை திரும்ப செய்தவர்களும் அதே குடும்பத்தினர் தான்.

முதல்வராக சசிகலா பதவியேற்கும் விழாவை தங்கள் குடும்ப விழாவாக கொண்டாட சசிகலா உறவுகள் திட்டமிட்ட போதுதான் திருப்பங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. பன்னீர் போர்க்கொடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு என சசிகலாவை நோக்கி ஒவ்வொரு அம்பாக ஏவப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டதை உணரத் துவங்கியது சசிகலா குடும்பம். பி.ஜே.பி அரசை சரி செய்ய சசிகலா தரப்பில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கும் இன்றுவரை பலனில்லை.



சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா வழக்கை துாசிதட்டி எடுத்தது.

அதே நேரம் தினகரன் கட்சிக்குள் குடும்ப உறவுகள் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கடுமையாக இருக்க குடும்ப உறவிலும் சிக்கல் எழுந்தது. தினகரனின் மாமா திவாகரன் பெங்களுர் சிறையில் இருந்த சசிகலாவிடம், “ஆர்.கே நகர் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பதவிவேண்டும்” என்று கோரிக்கைவைத்தார். அதற்குக் காரணம் தினகரன் கட்சியில் செலுத்திய ஆளுமை தான். தங்கள் குடும்ப சொத்தாக அ.தி.மு.கவை கருதிய குடும்ப உறவுகளுக்கு தினகரனின் தனி ஆவர்த்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனை காலி செய்ய வேண்டும் என்ற சத்தம் அவர்கள் உறவுகளின் வாயில் இருந்தே கேட்க துவங்கியது.

மத்திய அரசோ தினகரனை கட்சியில் இருந்து கழற்றுவதற்கு முன் அவரை சுற்றி அரணாக நிற்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. தினகரன் பக்கத்தில் இருந்தால் இது தான் நிலை என்ற அச்சத்தை தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் மத்திய அரசு ஏற்படுத்தியது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டு அமைச்சர்களுக்கு தரப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கபட்டது. அதன் பிறகு தான் அமைச்சர்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்ட பி.ஜே.பி தரப்பு, தமிழகத்தின் சில முக்கிய புள்ளிகள் மூலம் அமைச்சர்களிடம் தனித்தனியாக மத்திய அரசின் எண்ணத்தை பதியவைத்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் காப்பாற்றவேண்டுமானால் ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள்.

மறுபுறம் சசிகலா குடும்பத்தில் இருந்தே தினகரனுக்கு நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்து, சில அமைச்சர்களை தினகரனுக்கு எதிராக பேசச் சொல்லியுள்ளார்கள். திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராகவே செயல்பட நெருக்கடியின் உச்சத்துக்கு சென்றார் தினகரன். ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று குடும்பத்தையும் மத்திய அரசையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய தினகரனுக்கு தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு அடுத்த சோதனையாக அமைந்தது. தேர்தல் ரத்து செய்யபட்டாலே அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பம் வந்துவிடும் என மத்திய உளவுத்துறை சொன்ன தகவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.



மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதும் கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த மத்திய அரசு, தினகரனுக்கு அடுத்த நெருக்கடி கொடுக்க இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கை டெல்லியில் பதிவு செய்ய அமைச்சர்கள் மனநிலை அப்போதே சசிகலா குடுமபத்துக்கு எதிராக மாறியுள்ளது. அதே நேரம் திவாகரன் தரப்பில் இருந்து சில அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்குங்கள், ஓ.பி.எஸ் அணியுடன் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

குடும்ப உறவுகள் ஓருபுறம், மத்திய அரசு ஒருபுறம் என தினகரனுக்கு கொடுக்கபட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் தான் தினகரன் இருந்துள்ளார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு தகவலால் தான் நேற்று காலை வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களை வீட்டிக்கு வர வைத்துள்ளார். அவர்ளிடம் என்னை ஒதுக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசு இந்த அரசை செயல்படவிடாது என்று சொல்லியுள்ளார். அதற்குள் ஓ.பி.எஸ், “சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி ஒன்றிணைய வாய்ப்பில்லை” என்று சொன்னதும், அமைச்சர்கள் தரப்பினர் இதைப் பார்த்து காத்திருந்தது போல “தினகரன், சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி இருக்காது” என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று தினகரனும் எதிர்பார்த்திருந்தாராம். இந்த சிக்கலில் தனது குடும்ப உறவுகள் சிலருக்கு போன் போட்டு என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்து இவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். “இத்தனை நாள் நீதானே எல்லாம்னு சொன்ன, இந்த பிரச்னையும் நீயே பார்த்துக்கோ” என்ற ரீதியில் கடுப்பாக பேசியுள்ளார் குடும்ப உறவினர் ஒருவர்.

தலைக்கு மேல் தண்ணீர் போய்விட்டதை தினகரனும் உணர்ந்துள்ளார். "எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு பெரிதாக இருக்காது, மத்திய அரசுக்கு பயந்து தான் அவர்கள் செயல்படுவார்கள், இனி விசுவாசத்துக்கு வேலையில்லை” என்று தனது நண்பரிடம் போனில் சொல்லியுள்ளார். ஆனாலும் “கட்சியை விட்டு விலகாமல் கடைசி வரை போராட வேண்டும் என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். இரண்டு அணியும் ஒன்றிணைந்தாலே அங்கு கிளம்ப போகும் பிரச்னைக்குப் பிறகு நாம் அடுத்த கட்டமாக விஸ்வரூபம் எடுப்போம், மாவட்டச் செயலாளர்களை சரி செய்தாலே இப்போது போதும் என்ற முடிவில் தினகரன் உள்ளார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தகவல் வந்ததும் மன்னார்குடியில் இருந்து திவாகரன் புறப்பட்டு சென்னை வந்துவிட்டாராம். இன்று கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவிப்பே தன் பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ளதானாம். ஆனால் இந்த கூட்டத்தையும் நடத்தவிடாத வேலைகளில் அமைச்சர்கள் தரப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

“கண் அசைவிக்கு கட்டுபட்டவர்கள் எல்லாம், கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள் ”என்ற கவலை தினகரனை இப்போது வாட்டிவருகிறது.

-அ.சையது அபுதாஹிர்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024