Wednesday, April 19, 2017

தினகரன் விரைவில் கைதாகலாம்!

VIKATAN NEWS

BHUVANESHWARI K



'இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி தினகரன் விரைவில் கைதாகலாம்' என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் இதுவரை இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்குமா? என்பது கூட சந்தேகம்தான். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. "மோசமானவற்றில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அதுதான் தற்போது தமிழக அரசியலில் நிகழ்ந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டிக்கான காய் நகர்த்தலால் 'பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு' எனும் பரபரப்பு அரங்கேற்றப்பட்டு தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாறுதலையும் சந்தித்தது.

இந்த நிலையில், ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் 'இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நின்றன.

இரட்டை இலைக்கான சண்டை!

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் முடக்கி வைத்தது. மேலும், 'அ.தி.மு.க-வின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது' என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தனித்தனியான சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஆர்.கே நகரில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பட்டுவாடாக் குற்றச்சாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ச.ம.க தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தெரிவித்தது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போக 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சின்னத்துக்காக பணம் கொடுத்தது அம்பலம் !

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் சசிகலா அணியும் ஒ.பன்னீர்செல்வம் அணியும் சேருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதற்காக டி.டி.வி தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுகேஷிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார்களையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தருவதற்காக, டி.டி.வி தினகரனிடம் 50 கோடிக்கு ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். முன் பணமாக சுகேஷ் வாங்கியத் தொகையான 1.3 கோடி ரூபாய் மற்றும் டி.டி.வி தினகரனுடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினகரன் மீது வழக்கு பதிவு ..!

இதன் அடிப்படையில் தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்ற தினகரன் அவரை சந்திக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கேயே வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் சொல்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும் டெல்லித் தரப்பினர், "தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர தயாராகி வருகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் அங்கு வரலாம். ஏற்கெனவே மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சென்னை வந்துவிட்டார்கள்" என்ற ரகசியத் தகவலையும் கசியவிடுகின்றனர்.

சுகேஷ் சொல்லிய பி.ஜே.பி தலைவர் ?

டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தில் பேசியபோது, ''தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியையும் சின்னத்தையும் சசிகலா அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க பி.ஜே.பி-யைச் சேர்ந்த இரு தலைவர்கள் செயல்பட்டனர்'' என்கின்றனர். விசாரணையிலும் பி.ஜே.பி-யில் உள்ள அந்த தலைவரின் பெயரை சுகேஷ் சந்திரசேகர் உச்சரித்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ''இந்தத் தகவல், பி.ஜே.பி-யின் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் சந்தேகம்'' என்கிறார்கள்.

சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களிடம் நான் எப்படி பேசியிருக்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் .

மீண்டும் பெரியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .."கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்!"

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024