இது வரம், சாபமல்ல!
By ஆசிரியர் |
Published on : 04th April 2017 01:34 AM |
சர்வதேச அளவில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடிப்படைத் தகுதியைத் தேர்வு மூலம் முடிவு செய்து அதனடிப்படையில் மட்டும்தான் மதிப்பெண் அடிப்படையில் ஆனாலும், நன்கொடை அடிப்படையானாலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட முடியும் எனும் நிலை ஏற்பட்டால், இந்திய மருத்துவக் கல்வியின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்பதுதான் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதன் நோக்கம்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்துத் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, 'நீட்' தேர்வு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, மாநில அரசுகள் விருப்பப்பட்டால், 'நீட்' தேர்விலிருந்து அவற்றுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. ஆனாலும்கூட, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும், மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றது.
மருத்துவக் கல்வியில் உள்ள பிரச்னைகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வே தீர்வு என்று நினைத்துவிட வேண்டாம். 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களைப் பெறும் மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்குக் கடுமையான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்துக் கவலைப்படாத நமது அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும். 'நீட்' நுழைவுத் தேர்வை மட்டுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரச்னை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு அல்ல. நமது மாநில அரசின் கல்வித் திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதுதான். 'நீட் தேர்வை நடத்துவது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்பதால், அந்தக் கல்வித் திட்டத்தின் தரத்தில் படித்திருந்தால் மட்டுமே, அந்தத் தேர்வை எதிர்கொள்ளமுடியும்.
இந்த ஆண்டு 'நீட்' தேர்வு எழுதுவதற்கு தமிழகத்திலிருந்து 88,431 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்கள் தனியார் பயிற்சி நிலையங்கள் நடத்தும் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் படித்தவர்கள். அநேகமாக எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் 'நீட்' தேர்வையே சாக்காக வைத்து அதற்கான தனிப் பயிற்சிக்கென ரூ.50,000-த்திலிருந்து ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். முறையான பயிற்சி பெற்றவர்களால்தான் அந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. 'நீட்' குறித்த அடிப்படையே தெரியாத பலர் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், தனியார் பள்ளிகளுடன் இணைந்து பயிற்சி வழங்குவதும் அரசுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
கிராமப்புற மாணவர்களால் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என்கிற காரணத்தைக் காட்டி அவர்களை எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இப்படியே வைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 'நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோருவதன் மூலம் தமிழக மாணவர்களின் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுவது அவமானகரமாக இல்லையா' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் எழுப்பியிருக்கும் கேள்வி கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை, நமது பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தரத்துக்கு உயர்த்துவதும், தமிழக அரசே நமது மாணவர்களை 'நீட்' தேர்வுக்கு முறையான தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்துத் தயார் படுத்துவதும்தானே ஆக்கபூர்வமான அணுகுமுறையாக இருக்க முடியும்?
அவரவர் தாய்மொழியில் 'நீட்' தேர்வு எழுதலாம் என்று சொல்லிவிட்ட நிலையில், நமது கிராமப்புற மாணவர்களை தேசியத் தேர்வுகளின் போட்டிக்குத் தயார் படுத்துவதில் முனைப்புக் காட்டுவோம். நமது பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவோம். இதுபோல நெருக்கடி ஏற்பட்டால்தான் மாற்றங்கள் சாத்தியப்படும். 'நீட்' நமக்குக் கிடைத்திருக்கும் வரம், சாபமல்ல!
No comments:
Post a Comment