Tuesday, April 4, 2017

அதிக பயன்பாடு ஆபத்து

By லோ. வேல்முருகன்  |   Published on : 04th April 2017 01:29 AM  | 

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மனிதர்கள் பல வழிமுறைகளை கையாளுவர். ஒரு சிலர் வெயில் காலம் தொடங்கியவுடனே மொட்டை மாடியில் மாலை வேளைகளில் இரண்டு மூன்று முறை தண்ணீர் தெளித்து பின்னர் படுத்து உறங்குவார்கள்.

ஒரு சிலர் வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு தூங்குவார்கள். சிலரோ இளநீர் உள்ளிட்டவைகளை அருந்தி தங்களது உடல் சூட்டை தணித்துக் கொள்வர். இதுபோன்று இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி கோடை வெப்பத்தை சமாளித்தால், அதில் எந்த தவறும் இல்லை. நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இன்றைய நவீன உலகில் வீடுகள், அலுவலகங்கள், வங்கிகள், துணிக் கடைகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் குளிரூட்டிகளின் (ஏர் கண்டிஷனர்) பயன்பாடு அதிகரித்து வருகிறது.

அமெரிக்க பொறியாளர் வில்லிஸ் ஹேவிலேண்டு என்பவரால் 1902 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குளிரூட்டியானது முதலில் ஜன்னல்களில் மாட்டி பயன்படுத்தும் வகையில் (விண்டோ ஏசி) இருந்தது.
இதையடுத்து 1950-களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் விற்பனை குடியிருப்பு வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் நவீனமாக பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கியது. ஸ்பிலிட் ஏசி, சென்ட்ரலைஸ்டு ஏசி, வாகனங்களில் பயன்படுத்தும் ஏசி என பல வகையாக குளிரூட்டிகள் தற்போது உள்ளன.

தொடக்கத்தில் கணினி போன்ற இயந்திரங்கள் அதிக சூடாவதை குறைப்பதற்காக குளிரூட்டி கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த தொடங்கினர். பின்னர் அதுவே அனைத்து இடங்களையும் வியாபிக்கத் தொடங்கிவிட்டது.

கணினி போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் 'சிப்பு'கள் மிகவும் நுண்ணியவை. அவை அதிகமாக சூடேறினால் பழுதாகும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாகத்தான் கணினிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தத் தொடங்கினர்.

அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தும்போது ஊழியர்கள் புத்துணர்வுடன் பணிபுரியும் சூழல் உண்டானது. பணிகள் தொய்வின்றி நடக்கவும், ஊழியர்கள் வசதியாக பணிபுரியவும் முடிகிறது என்பதால் அலுவலகங்களில் குளிரூட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் இயற்கை காற்றை சுவாசிக்காமல், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அதுவும் கோடை காலங்களில் குளிரூட்டிகளை அதிகமாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் குளிரூட்டிகளின் பயன்பாட்டால் மனிதர்களின் உடல் நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது.

மின்விசிறிகளில் இருந்து வெளிவரும் காற்றானது அறையின் வெப்பநிலையை பொருத்தே இருக்கும். ஆனால் குளிரூட்டிகள் அவ்வாறு இல்லாமல் நமக்கு குளிர்ந்த காற்றை கொடுத்து அறையின் வெப்ப
நிலையை குறைக்கிறது. இதனால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு, சோர்வு, உலர்ந்த சருமம், சுவாசப் பிரச்னைகள், தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
மேலும் ஒவ்வொரு கோடை காலத்திலும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சுமார் 400 பேர் வரை உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிலர் கார்களில் ஏசியை போட்டு தூங்குவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அலுவலகம், ஷாப்பிங் போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்தி விட்டு, தூங்கும் தங்கள் குழந்தைகளை குளிரூட்டிகளை அணைக்காமல் காரிலேயே விட்டுச் செல்வர்.
அவ்வாறு விட்டுச் செல்லும் போது விஷவாயு தாக்கி குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் நிபுணர்கள் கார்களில் குளிரூட்டிகளை போட்டுக் கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இயற்கையாக கிடைக்கும் காற்றுதான் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை தரும். செயற்கையாக உண்டாக்கப்படும் காற்று ஆபத்தை தரும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் சிறிது நேரம் இருந்தால் அதனால் எந்த தீங்கும் ஏற்படாது. முறையாக பராமரிக்கப்படாத குளிரூட்டிகளால் ஒவ்வாமை, ஆஸ்துமா, கண், மூக்கு, தொண்டைகளில் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
எனவே குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் காற்று வடிகட்டிகளை (ஏர் பில்டர்) முறையான கால இடைவெளியில் சுத்தப்படுத்திட வேண்டும். குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் அறையின் ஜன்னல் கதவுகளை அவ்வப்போது திறந்து வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் வெளிப்புறக் காற்று அறை முழுவதும் பரவி அறையில் காற்று மாசு குறையும்.

மேலும், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் பழைய குளிரூட்டியை மாற்றிவிட்டு புதிய குளிரூட்டியைப் பொருத்த வேண்டும்.
வெளியில் நிலவும் வெப்பநிலையை விட ஐந்து டிகிரி வித்தியாசம் இருக்கும் வகையில் குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற வழிமுறைகளை குளிரூட்டிகள் பயன்படுத்துபவர்கள் கடைபிடித்து நோய் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024