Wednesday, April 12, 2017

சிறையில் வைகோ என்ன செய்கிறார்?

SYED ABUTHAHIR A
வைகோ
 
“என்னைச் சிறையில் அடையுங்கள்” என்று நீதிபதியிடம் முறையிட்டதோடு, ''பிணையும் எனக்கு வேண்டாம்'' என்று கூறி பதினைந்து நாள்கள் சிறைவாசத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர் வைகோ.
“நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னையில் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, “மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்” என்று கூறி அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த வழக்கில் வைகோவே நீதிமன்றத்தில் மனு செய்து, ''இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் அல்லது என்னைச் சிறையில் அடையுங்கள்'' என்று நீதிபதியிடம் முறையிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 இந்த வழக்கில் வைகோ மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி, வைகோவை பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அன்று சென்னை புழல் சிறைக்கு வைகோ கொண்டு செல்லப்பட்டார். ''கட்சிக்காரர்களோ, தனது நண்பர்களோ சிறையில் வந்து தன்னைச் சந்திக்க கூடாது'' என்று எச்சரிக்கை செய்துவிட்டு சிறைக்குள் சென்றார் வைகோ.
சிறைக்குள் வைகோ என்ன செய்கிறார் என அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, “சிறைக்கு வருவது தலைவருக்கு ஒன்றும் புதிதல்ல என்பதால், சிறையினுள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்

. சிறைக்குச் செல்லும்போதே தனக்குத் தேவையான உடைகளை முதலில் எடுத்து வரச்சொன்னார். மறுதினம், அவர் வாக்கிங் செல்லும்போது பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் ஷூ, ட்ராக்ஸ், டீசர்ட் போன்றவற்றை எடுத்துவரச் சொன்னார். சிறையில் காலையில் வாக்கிங் போகிறார்; ஷூ, டிசர்ட் சகிதமாக காலைப்பொழுதைக் கழிக்கிறார். வைகோ சிறைக்குள் வந்ததுமே, சிறையில் உள்ள பலர் அவரைக் காண ஆர்வத்தோடு அவருடைய செல்லுக்கு வருகின்றனர். பகல் நேரத்தில் சிறையில் இருக்கும் சக கைதிகளுடன் அவர் பேசுகிறார். விளையாட்டில் வைகோவுக்கு ஆர்வம் அதிகம். பொடாவில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் கைதிகளையே இரண்டு அணிகளாகவைத்து வாலிபால் போட்டிகளை நடத்தியவர். இப்போது வாலிபால் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டதால், சிறையில் கைதிகள் விளையாடினால் அதை உற்சாகப்படுத்திவருகிறார்.


சிறைக்குச் சென்றதுமே அவரிடமிருந்துவந்த முதல் தகவலே, 'புத்தகங்களை வீட்டில் இருந்து எடுத்துவரச் சொல்லுங்கள்' என்பதுதான். பதினைந்து நாள்கள் சிறைவாசத்தில் ஐம்பது புத்தகங்களையாவது படித்துவிட வேண்டும் என்ற குறியில் அவர் உள்ளார். மல்யுத்த வீரர் 'தாராசிங் வரலாறு', ராம்ஜெத்மலானி எழுதிய புத்தகம், 'நீலம் சிவப்பு மஞ்சள்' போன்ற புத்தகங்களை அவர் படித்துவருகிறார். 'சிறைக்காலத்தைப் புத்தகங்கள் படிப்பதில் செலவிட வேண்டும்' என்று அவரே எங்களிடம் சொல்லியுள்ளார். வெளியில் இருந்து சாப்பாடு கொண்டு சென்றால்கூட வேண்டாம் என்று தவிர்த்துவிடுகிறார். ஏப்ரல்-5ம் தேதி அன்று அவருடைய தந்தையாரின் நினைவுதினம் என்பதால் அன்று ஒரு நாள் முழுவதும் மௌனவிரதம் இருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக மௌனவிரதத்தை விடாமல் கடைப்பிடித்து வருகின்றார்” என்கிறார்கள்.

''சிறையிலிருந்து அவர் வெளியே வரும்போது... அங்கேயே தமக்கான ஆதரவாளர்களை உருவாக்கிவிடுவார்'' என்கிறார்கள் ம.தி.மு.க-வினர். வரும் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார் வைகோ. அன்றே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவும் உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024