Wednesday, April 19, 2017

பன்னீர்செல்வம், பழனிசாமி அடுத்தடுத்து ஆலோசனை! பரபரப்பில் கிரீன்வேஸ் சாலை
vikatan சகாயராஜ் மு



சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோனை நடத்திவருகிறார். இந்த நடவடிக்கையால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவிவருகிறது.

சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதனிடையே, பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் குழு ஒன்றை அமைப்பதுகுறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்த நிலையில், மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

முதல்வர் பழனிசாமி அணி அமைச்சர்களின் அழைப்புகுறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் அடுத்தடுத்து நடத்திவரும் ஆலோசனையால், கட்சியினர் இடையே பரபரப்பு நிலவிவருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024