Wednesday, April 19, 2017

‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

ஆ.விஜயானந்த்




அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், கழகமும் நம் கையைவிட்டுப் போய்விடும்' என விவாதித்துள்ளனர். முதல்வரின் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பகமாக உள்ளது' என்றார். இந்தக் கருத்தை எதிர்பார்த்த தினகரனும், 'எம்.எல்.ஏக்கள் அனைவரும் என் பின்னால்தான் உள்ளனர்' எனப் பேட்டியளித்தார். தற்போது தினகரனுக்கு ஆதரவாக, வெற்றிவேல், சுப்ரமணியம், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதித்தனர். அதில், ‘முதல்வர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்துக்கே வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். கூடவே, மா.ஃபா.பாண்டியராஜன் உள்பட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுகுறித்து, தங்களுக்குள் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த விவாதத்தில், ‘முதல்வர் பதவியில் சமசரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்ற கருத்தையே கொங்கு மண்டல அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவி மட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. அமைச்சர்களின் ஒருமித்த கருத்தாகவும் இது உள்ளது. இதற்குக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா எதிர்ப்பு என்பது தீபா பக்கம் சென்றது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா எதிர்ப்பு அவர் பக்கம் சென்றது. மக்களும் அவர் பக்கம் நின்றார்கள். இந்த இடத்தில்தான் பன்னீர்செல்வம் தவறு செய்தார் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,



‘சசிகலா குடும்பத்தின் நிர்பந்தத்தை ஏற்று பன்னீர்செல்வம் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் பாலபாடம் என்பது, உறுதியான உத்தரவாதம் இல்லாமல் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதுதான். பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில், 'மீண்டும் அமைச்சரவையில் அவரை சேர்க்கக் கூடாது' என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். இந்த ஏமாற்றத்தில்தான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். 'தற்போது நிலைமை அப்படி இல்லை. மிகக் குறைந்த மெஜாரிட்டியில்தான் இந்த அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அப்படியே தொடரும். இன்னொரு மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்தச் சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பன்னீர்செல்வத்தை மீறித்தான் இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்ததுபோல, இந்தப் பதவி நமக்கு வந்து சேரவில்லை. அமைச்சரவையில் நம்பர் டூ இடத்தில் இருந்ததால்தான் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. இதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து அரசை செலுத்துவேன். நான் பொம்மை முதல்வர் என்று யாரும் சொல்ல முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போதும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிரடியை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இரு தரப்பும் ஏற்கும்விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்க உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் விவகாரம் முடிவுக்கு வரும்" என்றார் விரிவாக.

"பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதிலும், கொங்கு மண்டல லாபியை வளர்த்துவிடுவதான் பா.ஜ.கவின் முக்கிய நோக்கம். கொங்கு மண்டலத்தின் சில தொகுதிகளில் பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுவதன் மூலம், அந்த வாக்குகளையும் பா.ஜ.கவை நோக்கித் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. அதையொட்டியே, 'எடப்பாடி பழனிசாமியே பதவியில் தொடரட்டும். கட்சிப் பதவியை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடலாம்' என சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

தினகரனால் வளர்த்துவிடப்பட்ட பன்னீர்செல்வமும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துவிட்டனர். இந்தக் கோட்டை அழிக்கும் வித்தை தெரியாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், 'துரோகம் தொடர்ந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?' எனப் புலம்பி வருகிறாராம் தினகரன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024