நாட்டில் 24 போலி பல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு
dinamalar 16.04.2018
நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், கட்டமைப்பு, ஆராய்ச்சி நிதிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு மேற்கொள்கிறது. யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும், 'நாக்' அமைப்பு,
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பு அந்தஸ்தை தருகிறது.
இதுபோன்ற, அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலி கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது.
இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கும் முன், போலி பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம். தற்போது, நாடு முழுவதும், 24 பல்கலைகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரு பல்கலையும் இடம் பெறவில்லை.
டில்லியில் 7 பல்கலைகள், உத்தரபிரதேசத்தில், 8; மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா, 2; பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று, இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment