Wednesday, June 6, 2018

மனசு போல வாழ்க்கை- 11: தவறான முடிவும் சிந்தனைத் திரிபும்

Published : 02 Jun 2015 12:14 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்
 




நமது எண்ணங்கள் பிரச்சினைகளைத் திரித்துப் பார்ப்பதன் மூலம் நம்மைப் பற்றிய எண்ணத்தையும் பிறரைப் பற்றிய எண்ணத்தையும் அதற்கேற்ப மாற்றி யோசிக்கலாம்.

காரணங்கள்

மகனின் நடத்தை சரியில்லை என்று பள்ளியில் பெற்றோரை அழைக்கின்றனர். மகன் செய்த காரியங்களைக் கேட்டுப் பதைக்கிறாள் தாய். உடனே இப்படி நினைத்துக் கொள்கிறாள். “ஒரு அம்மா என்ற முறையில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்கெல்லாம் நான்தான் காரணம். என்னால் யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது. எல்லாம் என் தலைவிதி!” இதை Personification என்பார்கள். “எது நடந்தாலும் அதற்கு நான் மட்டும் காரணம்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வது.

மகன் செய்த காரியங்களைக் கேட்ட தந்தை இப்படிப் பேசுகிறார்: “எல்லாரும் சேர்ந்து குட்டிச்சுவராக ஆக்கிட்டீங்க. ஒரு பக்கம் பாட்டி செல்லம், இன்னொரு பக்கம் அம்மா செல்லம். உருப்படுமா? நான் வேலையா இருந்துட்டேன். உங்க யாருக்காவது பொறுப்பு வேண்டாம்? எல்லாம் உங்களாலதான்!” எது நடந்தாலும் அது பிறராலே என்று எண்ணுதல். பிறரைக் குற்றம் சொல்லும் ஒரு சிந்தனைத் திரிபு.

இரண்டு திரிபுகள்

தன்னைக் குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரியில்லை. நீங்கள் சரி” என்ற மனநிலைக்கு எளிதில் சென்று தங்கிவிடுவர். இந்த நிலைப்பாட்டில்தான் எல்லாவற்றையும் நோக்குவார்கள். இவர்களை துக்க நோய் எளிதில் தாக்கும்.

பிறரை குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரி; நீங்கள் சரியில்லை”என்ற மன நிலையில் அழுத்தமாகத் தங்கி விடுவார்கள். அந்த நிலைப்பாடு அவர்களைக் குற்ற உணர்வின்றித் தவறிழைக்க வைக்கும். பிறர் மீது வன்முறை செலுத்த நியாயம் கற்பிக்கும்.

இரண்டும் சிந்தனை திரிபுகள்தான். குற்றப்படுத்துதல்தான் மையக்கரு. யாரையும் குற்றம் சொல்லப் பார்க்காமல் தர்க்கரீதியாகப் பிரச்சினையை அணுகுவதுதான் மனப்பக்குவம்.

மாறும் மதிப்பீடுகள்

நம்மை மிகவும் வருத்தும் இன்னொரு சிந்தனைச் சிக்கல் “இது இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நினைப்பது. Shoulds and Musts என்பார்கள். இவைதான் உறவுகளை நசுக்கும் எதிர்பார்ப்பு ஆயுதங்கள். மேம்போக்காகப் பார்த்தால் மிக இயல்பாகவும் சரியாகவும் தோன்றும் இந்த எதிர்பார்ப்புகள்தான் உறவில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தும்.

நம் குடும்பம், சமூகம், கல்வி, கலாச்சாரம் போன்றவை ‘ஒழுங்கு’ என்ற பெயரில் சில எதிர்பார்ப்புகளை வளர்க்கின்றன. ஆனால், அவை அனைத்தும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருபவை. கடந்த கால மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு இறுக்கமாக எதிர்நோக்கும் போது அங்கு உறவுகள் பாதிக்கப் படுகின்றன.

விளக்கு வைத்த பிறகு பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்றார்கள் ஒரு காலத்தில். இன்று அலுவலகத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற வீட்டிலேயே அனுப்பி வைக்கும் இயல்பு நிலை வந்துவிட்டது. இப்படி நிறையச் சொல்லலாம்.

மூலகாரணம்

டாக்டர்கள் விளம்பரம் செய்யக் கூடாது. பிராமணர்கள் அசைவம் சாப்பிடக் கூடாது. ஆண்மகன் அழக் கூடாது. இதில் சரி, சரியில்லை என்று விவாதிப்பதைவிட மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் விஷயம்.

“ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை. சம்பாதிக்கிறாள் என்பதற்காக ஒரு பெண் இப்படி எல்லாம் திருப்பிப் பேசக் கூடாது!”

இதில் யார் என்ன பேசினார்கள் என்ன பிரச்சினை என்பது போய்விட்டது. பாலின அரசியல் வந்துவிட்டது. அதற்குக் காரணம் பெண் பற்றிய “இப்படித்தான் இருக்க வேண்டும்!” என்ற எண்ணம்.

விவாதத்துக்கு உட்படுத்தக்கூட மனமில்லாத வகையிலான இறுக்கமான சிந்தனைகள்தான் எல்லா விரிசலான உறவுகளின் பிரச்சினையில் மூலகாரணங்கள்.

எழுதுங்கள்

சரி, உங்களுக்கு என்னவெல்லாம் சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? யாரிடமும் பேசக்கூட வேண்டாம். உங்களின் பிரதானப் பிரச்சினைகள் மூன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை, ‘பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள்’ என்ற விகிதத்தில் ஆறு பக்கங்கள் எழுதுங்கள். மொழி நடை முக்கியமில்லை. இலக்கணப் பிழைகள் பரவாயில்லை. கையெழுத்து சரியில்லை என்றால் பாவமில்லை. எது முக்கியம் என்றால் மனதுக்கு வருவதைத் தடையில்லாமல் எழுதுங்கள். ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் தவணை முறையில் எழுதுங்கள். எழுதி முடித்தவுடன் ஆராயாதீர்கள்.

மறுநாள் யாரோ எழுதிய கடிதம் போலப் படியுங்கள். பின் எந்தெந்த வாக்கியங்களில் இப்படிப்பட்ட சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று பாருங்கள். அடுத்த கட்டமாக, உணர்வு மிகுதியான வார்த்தைகள் எவை என ஆராயுங்கள். அதன் உள்நோக்கம் என்ன என்று பார்த்துத் தர்க்கரீதியான அறிவுபூர்வமான வாக்கியங்களாக மாற்றுங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும்.

திரிபுகளின் விதி

எல்லா மாற்றங்களுக்கும் பொதுவாக உள்ள விதியை நினைவுபடுத்துகிறேன். எதையும் தெரிந்து பயனில்லை. முயற்சிப்பது முக்கியம். நீச்சல் அடிப்பது எப்படி என்று படித்துத் தெரிந்துகொண்டு பயனில்லை, நீரில் இறங்க வேண்டும்.

நாம் செய்த பல தவறான முடிவுகளுக்கு விதை ஒரு சின்னச் சிந்தனைத் திரிபு தான். நம் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவர் பிரச்சினையை ஆராய்ந்தாலே ஆயிரம் கோணல் சிந்தனைகள் தெரியும்.

“படம் படு மோசம். இடைவேளை வரை கூட உட்கார முடியலை. ஒரே தலைவலி.”

“அப்போ இடைவேளையோட வந்திட்டீங்களா?”

“நீங்க வேற.... பணத்தைக் கொடுத்தாச்சுன்னு முழு படத்தைப் பாக்க வச்சுட்டார் எங்க வீட்டுக்காரர்.. இப்ப அவருக்கு தலைவலி, காய்ச்சல். டாக்டர்க்கு தண்டம் பண்ணது வேற எக்ஸ்ட்ரா !”

சுற்றி நடக்கும் உரையாடல்களில் இப்படி நிறைய சுவையான சிந்தனைத் திரிபுகள் கிடைக்கும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்தகைய திரிபுகளுக்கான உளவியலின் ஆதார விதியை அழகாகச் சொல்லிவிட்டார்.

“சிந்தித்துப் பார்த்து

செய்கையை மாத்து.

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!”

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.ccom

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024