Saturday, June 16, 2018

மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை மைய அதிகாரி தகவல்



சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஜூன் 16, 2018, 04:30 AM
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. அதன் காரணமாக சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு மாலையில் மழை பெய்யும். இந்த மழை தென்மேற்கு பருவ மழை இல்லை.

இது வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழை. கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 32 மி.மீ. பெய்துள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழை 27 மி.மீ.

தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென் மாவட்டங்களிலும், சில வட மாவட்டங்களிலும் காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024