Saturday, June 16, 2018

மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மூலம் நடவடிக்கை



ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் முயற்சி செய்ய இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

ஜூன் 16, 2018, 05:45 AM
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதால், அதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக் கும் தங்களை விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு இரு கடிதங் களை எழுதியது.

இந்த நிலையில், தமிழக அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிப்பது குறித்த கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்குமாறு கடந்த ஜனவரி 23-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் உடல்நிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்ப சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. அதன்பேரில் அந்த விவரங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் மனிதநேயத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.

இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஜனாதிபதி முடிவை எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து உள்ளார்.

மேலும் அவர்களை விடுதலை செய்யக்கோரும் மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என்று தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்களை எந்த காரணத்தைகொண்டும் சுதந்திரமாக நடமாட விடமுடியாது என்று உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தது பற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. அந்த வழக்கிலே சில தெளிவுரைகள் வழங்கப்பட்டு, நிலுவையில் இருக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய மனுவை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நிராகரித்ததாக செய்திகள் வந்து இருக்கின்றன.

இருந்தாலும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு சார்பில் விளக் கத்தை தெரிவித்து அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024