Thursday, June 21, 2018

சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்கள் கதறல்




சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில அளவீடு செய்யும் பணி 3-வது நாளாக நேற்று நடந்தது.

ஜூன் 21, 2018, 04:45 AM
அயோத்தியாப்பட்டணம்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணியை அரசு தொடங்கி உள்ளது.

இந்த சாலை திட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், 8 மலைகள் உடைக்கப்பட உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடியில் இருந்து சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி வரை இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாய நிலங்களில் எல்லைக்கல் ஊன்றி அளவீடு செய்யும் பணியில் கடந்த 18-ந் தேதி முதல் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து நில அளவீட்டின் போது அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெற்றது. குறிப்பாக முதல் 2 நாட்களில் மஞ்சவாடி, அடிமலைப்புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நில அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குப்பனூர் ஊராட்சி சீரிக்காடு பகுதியில் இருந்து நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில், வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகநாதன் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சீரிக்காடு அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் நில அளவீடு செய்ய முருகன் என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் செல்ல முயன்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயி முருகன் அதிகாரிகளிடம் கூறியதாவது:-

‘என்னிடம் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 4 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள், நெல் சாகுபடி செய்து வருகிறேன். இப்போது 8 வழிச்சாலைக்காக நில அளவீடு செய்து எல்லைக்கல் போடப்பட்டதில் 2 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த 2 ஏக்கரில் 150-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருக்கிறது. தோட்டத்தின் நடுவே இந்த சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கமும் எனது மீதி நிலம் உள்ளது. இதனால் தோட்டத்திற்கு செல்லவும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாது. அதனால் 8 வழிச்சாலையை தள்ளி போட வேண்டும். இல்லையென்றால் எனது நிலத்தை எல்லாம் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் வந்து அவரை சமாதானம் செய்தனர்.

வெள்ளியம்பட்டியில் நில அளவீடு செய்து ராமசாமி, நைனாமலை ஆகியோரின் தோட்டத்தில் எல்லைக்கல் நடப்பட்டது. இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி ஆவார்கள். எல்லைக்கல் நடப்பட்டவுடன் ராமசாமியின் மனைவி பச்சியம்மாள் நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசியிடம் கதறி அழுதார். அப்போது அவர், ‘எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 3½ ஏக்கரும், நாங்கள் குடியிருக்கும் வீடு, கிணறும் பசுமைச்சாலைக்காக போகிறது. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். இதற்கு மேல் என்ன செய்யபோகிறோம் என்று தெரியவில்லை’ என்றுக்கூறி கதறி அழுதார்.

அந்த பெண்ணிடம் தாசில்தார் அன்புக்கரசி கூறும்போது, ‘நிலம் எடுப்பின் போது உங்களது வீடு, கிணறு, தென்னை மரங்கள், நிலங்கள் ஆகியவற்றுக்கு இழப்பீடு தரப்படும். அடுத்த மாதம்(ஜூலை) 6-ந் தேதி இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நடைபெறும். அப்போது நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து முறையிடலாம்’ என்று கூறி சமாதானம் செய்தார்.

இதேபோல் சந்திரனின் மனைவி லட்சுமி குடும்பத்தினருக்கு 3½ ஏக்கர் நிலம் உள்ளது. லட்சுமி கண்ணீர் விட்டு அழுது கொண்டே ‘நாங்கள் 30 ஆண்டாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் படித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை. மகளுக்கு திருமணம் ஆகவில்லை. எங்களது 3½ ஏக்கர் நிலமும், வீடு, கிணறு ஆகிய அனைத்தும் போய் விட்டது’ என்று கூறி கதறி அழுதார். தாசில்தார் அன்புக்கரசி அவரையும் சமாதானம் செய்தார்.

மேலும் இந்த பெண்கள் கதறி அழுதபோது, ஒரு கட்டத்தில் ‘எங்களை வாழ விடுங்கள் இல்லை என்றால் சாகவிடுங்கள்‘ என்று ஆவேசமாக கூறினர். மேலும் விவசாய நிலங்கள் பறிபோனால் நாங்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும், அரசு இந்த விஷயத்தில் எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும், விளைநிலங்களை எடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், தொடர்ந்து குள்ளம்பட்டி அருகே உள்ள காட்டூர் வரை நில அளவீடு பணியை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...