Sunday, June 24, 2018

புதுச்சேரி ஜிப்மரில் இடஒதுக்கீடு:மருத்துவ கவுன்சிலுக்கு 'நோட்டீஸ்'

Added : ஜூன் 24, 2018 02:31

சென்னை: புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டிராத ஆதி திராவிட சமூகத்தினருக்கு, மருத்துவ கல்லுாரிகளில் இடம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, 'ஜிப்மர்' மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த, சரண்தேவ் என்பவர் தாக்கல் செய்த மனு: ஜிப்மரில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, புதுச்சேரியை சேர்ந்த, ஆதி திராவிட சமூகத்தினருக்கென, ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை, புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். சமீபத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, புதுச்சேரியை சேர்ந்த, ஆதி திராவிடர்களுக்கான தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ௧௦வது வரிசையில் நான் இருந்தேன்.பட்டியலை கவனமுடன் பரிசீலிக்கும் போது, அதில் இடம் பெற்றிருந்த, ஐந்து பேர், புதுச்சேரியை சேர்ந்த ஆதி திராவிட சமூகத்தினர் அல்ல; அவர்களின் பூர்வீகம், புதுச்சேரி அல்ல என்பது தெரிய வந்தது. 'வேறு மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு, குடியேறிய மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு சலுகையை பெற உரிமையில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, ஒரு இடத்தை காலியாக வைக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஜிப்மருக்கு,

நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ௨௬ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024