Monday, June 18, 2018

சமூக விரோதிகளின் கூடாரமான ரயில்வே குடியிருப்புகளால்... அச்சம்: *கட்டி முடித்து 2 ஆண்டு ஆகியும் திறக்கப்படவில்லை

Added : ஜூன் 17, 2018 21:55

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே குடியிருப்பில் கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் அப்பகுதியாக செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் கோயிலுக்கு அருகிலும், தண்டாளத்தின் மறுபக்கத்திலும் ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு 18 வீடுகள் உள்ளன. இவற்றில் 7 வீடுகளில் மட்டும் ரயில்வே ஊழியர்கள் வசிக்கின்றனர். மற்ற 11 வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன.
இதுதவிர, ரயில்வே அலுவலர்களுக்காக புதிதாக 4 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன் கட்டுமான பணிகள் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவற்றில் மின்வசதியும், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் வசதியும் இல்லை. யாரும் வசிக்காமல் அந்த வீடுகளும் பூட்டியே கிடக்கிறது. கழிவுநீர் செல்வதற்கு வசதியாக பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் கொண்டு வரப்பட்டு, வீடுகளுக்கு அருகில் போடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இரவு நேரங்களில் பூட்டிக்கிடக்கும் குடியிருப்பு பகுதிக்கு யாரும் செல்வதில்லை. இதனால், அருகில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது வாங்குவோர், கும்பலாக வந்து யாரும் வசிக்காத ரயில்வே குடியிருப்புகளில் அமர்ந்து மது அருந்துவதுடன், ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பயந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாலை நேரமாகி விட்டால் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் தினமும் மாலை நேரங்களில் சமூகவிரோதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. இதை தடுக்க, பூட்டிக்கிடக்கும் குடியிருப்புகளில் ரயில்வே பணியாளர்களை குடியமர்த்தவும், ரயில்வே போலீசார் தினமும் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வரவும் வேண்டும், இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் குமுறுகின்றனர்.---

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024