Tuesday, June 19, 2018

ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து



இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமாகும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 19, 2018, 05:15 AM

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு, அரசு செலவில் மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி உள்பட பலர் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதில், ‘கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக்கட்டிடமும் கட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தின் உள்ளே தான் ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்கப்படுகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர். நினைவிடம் கட்டப்பட்டு விட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வரைபட அனுமதியை தாக்கல் செய்கிறோம்’ என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ‘உலகிலேயே 2-வது மிக நீளமான கடற்கரையாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமையாகும். சாலையில் செல்லும் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி கடற்கரையின் அழகை கண்டு ரசிக்க வேண்டும். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளுக்குப் புறம்பாக மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் உள்பட எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இது என்னுடைய சொந்த விருப்பமாகும். ஆனால், இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களின் அடிப்படையில், இறுதி முடிவுக்கு வரமுடியும்’ என்று கருத்து கூறினார்.

பின்னர் விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024