Tuesday, June 19, 2018

சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood

பாலு சத்யா

‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது!
 
இடியாப்பம்
சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு.  கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் கூவிக் கூவி விற்ற அரிய உணவு. `பெரும்பானாற்றுப்படை’, `சிலப்பதிகாரம்’, `மதுரைக்காஞ்சி’ போன்ற தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வரலாற்று ஆசிரியர்கள் சிலர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் வருகைக்குப் பின்னர்தான் இடியாப்பம் தென்னிந்தியாவில் நுழைந்தது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது போர்ச்சுகீசியர்களின் வருகை என்பது இந்தியாவில் 1498-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்னரே இது இங்கே புழக்கத்தில் இருந்ததாக நம் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. அதோடு இடியாப்பம் செய்ய மூங்கில் தட்டுகள் பயன்படுத்தப்படும். ஆனால், மூங்கிலைக்கொண்டு செய்யப்படும் சமையல் முறை ஐரோப்பாவுக்கு அறிமுகமானது 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். அதுவும் ஜப்பான் மற்றும் சீன நாட்டினரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, போர்ச்சுக்கீசியர்கள்தான் இதை தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பது உறுதி இல்லை. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்கள்! அதோடு அவர்களின் செய்முறைக்கும் நம் முறைக்கும் எத்தனையோவிதங்களில் வேறுபாடு இருக்கின்றன.
சேவை
சுத்தமான அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுத்து அவித்தால் இடியாப்பம்! தேங்காய்ப் பால், பால், மீன் குழம்பு, பாயா இவற்றுடன் சாப்பிட அபாரச் சுவை! கேரளாவில் கொண்டைக்கடலையை கிரேவியாக்கி, அதனுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் உண்டு. இது, எளிய, ஆரோக்கியமான காலை உணவு. இடியாப்பத்தை உதிர்த்து, உப்புமாவாக்கலாம். நம் ஊரில் `சேவை’ என்று சொல்வார்கள். இதைக்கொண்டு எலுமிச்சை, தக்காளி, புளி என விதவிதமாக `சேவை’ செய்து ருசிக்கலாம். இடியாப்பத்தில் பிரியாணி செய்பவர்கள்கூட உண்டு. தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் இடியாப்பம் பெரும்பாலான ஹோட்டல்களில் கிடைக்கின்றது. ஆனால், அத்தனை உணவகங்களும் தாங்களே இதைத் தயாரிப்பதில்லை. இதற்கு தனி ஆள் போட வேண்டும்; செலவும் கூடுதல் என்பதால், மொத்தமாகத் தயாரிக்கும் இடங்களில் வாங்குகிறார்கள். உணவகங்களுக்கு இடியாப்ப சப்ளைக்கென தனியாக தொழிலே நடைபெறுகிறது. மொத்த மொத்தமாக தயாரித்து, விற்கிறார்கள். திண்டுக்கல், மணப்பாறை பகுதியில் இருந்து வந்தவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள்தான் தெரு வியாபாரிகளுக்கும் இடியாப்பத்தை விற்பனைக்குக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இடியாப்ப சிறுதொழில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அரசின் கடன் வசதிகூட பெறலாம். இதைத் தயாரிக்க மெஷினகள் வந்துவிட்டன.

   
இடியாப்பத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன... விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி...

டயட்டீஷியன் பத்மினி
“இடியாப்பம், குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் சராசரியாக 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் ஆகியவை உள்ளன. ஆயுர்வேத மருத்துவமுறையில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள். இதை இளஞ்சூடாக சாப்பிடுவது நல்லது. இதில் நமக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து அனைத்தும் உள்ளன. எனவே, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். எண்ணெய் சேர்க்காத, ஆவியில் வேகவைத்துச் செய்யப்படுவது என்பதால், வயிற்றுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, நோயின் தன்மைக்கேற்ப இடியாப்பம் செய்து, மற்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க ஏற்ற உணவு.
ஜுரம் - இடியாப்பத்தை இளஞ்சூடான நீருடன் கொடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு - மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்துத் தரலாம்.
பசியின்மை - எலுமிச்சை சேவை, தக்காளி சேவை என செய்து கொடுக்கலாம்.
வயிற்றுக்கோளாறுகள் - எலுமிச்சை சேவையாக கல் உப்பு போட்ட மோருடன் தரலாம்.
கர்ப்பிணிகள் - இத்துடன் தேங்காய்ப்பால், பால், நெய், நாட்டுச்சர்க்கரை, டிரைஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.

இடியாப்ப உணவு
அரிசியைத் தவிர்த்துவிட்டு,  சிறுதானியங்கள் மற்றும் கோதுமையில்கூட இதைச் செய்யலாம். பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.
உதாரணமாக, கோதுமை இடியாப்பத்தின் பலன்கள்...
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; இதய நோய்களுக்கான அபாயத்தை வெகுவாகக் குறைக்கும்; உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும்; சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு நல்லது; கோதுமை, சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதேபோல சிறுதானியங்களில் இதைச் செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம்’’ என்கிறார் பத்மினி.

ஆக, இடியாப்பம் நல்லது. என்ன... வெளியில் வாங்கும்போது இது, சுத்தமானதுதானா, ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பது தெரியாது. எளிதான செய்முறை. ஒருமுறை கற்றுக்கொண்டால் நாமே வீட்டில் தயாரிக்கலாம். ஆரோக்கியம் காக்கலாம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024