Tuesday, June 19, 2018

 சென்னை,சேலம்,எட்டு வழிச்சாலை திட்டம்,துவக்கம்


சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, முறைப்படி அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள் நேற்று பணியை துவக்கினர். இதனால் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்ட போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நில அளவீட்டு பணியின் போது முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த பலரை போலீசார் சுற்றிவளைத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ.,க்கு எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த கடந்த மாதம், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன்பின் எட்டு தனி தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு கிராமங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகளை அழைத்து பேச்சு நடத்தினர்.

ஆனால் வடமாநிலத்தைச் சேர்ந்த இயற்கை
ஆர்வலர் என தன்னை கூறிக் கொள்ளும் பியுஷ் மனுஷ், 43, உள்ளிட்ட போர்வையாளர்கள் மேற்கொண்ட மூளைச்சலவையின் காரணமாக விவசாயிகள் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த சிலரையும், நடிகர் மன்சூர் அலிகானையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட துாண்டும் வடமாநில வாலிபர் பியுஷ் மனுஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தனி தாசில்தார்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டனர். தொடர்ந்து சேலம் - அரூர்
சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நில அளவீடு பணியை துவக்கினர். முதலில் வனத்துறை, வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் அதிகாரிகள் கற்கள் பதித்தனர். தொடர்ந்து அடிமலைப்புதுார், கத்திரிபட்டி, அரமனுார், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதிகளில் நேற்று 8 கி.மீ.,க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன.
வருவாய் துறையினர் நிலத்தை அளந்து 70 மீட்டர் அகலத்துக்கு கற்களை பதித்தனர். அடிமலைபுதுார் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தும் அவர்கள் கலைய மறுத்தனர்.
இதனால் ஏழு பேரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் மாலையில் விடுவித்தனர்.

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்ட பணிகளை முடக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதால் போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

5 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதை விரிவாக்கும் பணிகள் துவங்க உள்ளன. இத்திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி மக்களிடம் நேற்று வி.ஏ.ஓ., அறிவழகன் தொழில், பொருளாதாரம், கல்வி போன்ற விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் விமான நிலைய விரிவாக்கம் குறித்து யாரையும் சந்திக்கக் கூடாது என மிரட்டினர். அறிவழகன் புகார்படி ஓமலுார் வன்னியர் சங்கத் தலைவர் முருகன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024