Monday, June 18, 2018


ஆர்ப்பாட்டம் வேண்டாமே...

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 15th June 2018 01:15 AM |  DINAMANI

சமீபத்தில், எங்கள் வீட்டருகில் வசித்த தொண்ணூறு வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமரரானார். விவரம் கேட்டவுடன் சற்றே பதற்றமானேன்.
இறந்தவர் குறித்த மரியாதையும் அனுதாபமும் ஒருபுறம் இருக்க, இறுதிச்சடங்குக்காக அவரது உடலை எடுத்துச் செல்லும் வரை அக்கம்பக்கத்தில் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது என்ற கவலைதான் பதற்றத்துக்குக் காரணம். மேளச்சத்தமும், வெடியோசையுமாக சுமார் ஒன்றரை நாள் நமது காது கிழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்குக் கிடைத்ததோ இன்ப அதிர்ச்சி.

வேறு யார் வீட்டு வாசலையும் அடைக்காமல் தங்கள் வீட்டு வாசலின் அகலத்திற்கு மட்டும் ஒரு துணிப்பந்தல் போட்டு, தெருவில் போவோர், வருவோர்க்கு வழிவிட்டு சில நாற்காலிகளை மட்டும் போட்டு வைத்திருந்தார்கள்.

இறுதி ஊர்வலத்துக்குப் பல மணி நேரம் முன்பாகவே இறந்தவரின் உடலை வீட்டிலிருந்து வெளியில் எடுத்து வந்து, நடுத்தெருவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இடைஞ்சல் செய்யவில்லை. மாறாக, இறுதிச்சடங்குகள் தொடங்குவதற்கு சற்று முன்புதான் வெளியில் கொண்டு வந்தார்கள்.
இறந்த பெண்மணியின் உறவினர்கள் ஒலி மாசு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி மிகவும் அறிந்திருக்க வேண்டும்.
இறுதிச்சடங்கு தொடங்கிய நேரத்தில் காதைக் கிழிக்கின்ற மேளச்சத்தம் எதுவுமில்லை.

மேலும், இறுதி ஊர்வலத்திற்கென பகட்டான மலர் அலங்காரங்கள் செய்த வண்டிக்கு ஏற்பாடு செய்யாமல், குளிர்சாதனப் பெட்டியுடன் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே இறந்தவர் சடலத்தை மயானத்துக்கு ஆரவாரம் ஏதுமின்றி எடுத்துச் சென்றார்கள்.

இதற்குப் பெயர்தான் உண்மையான இறுதி மரியாதை என்று எனக்குத் தோன்றியது. இறந்தவர் மீது அனுதாபமும், இறந்தவரின் உறவினர்கள் மேல் ஒரு மரியாதையும் இயல்பாகவே என் நெஞ்சில் உருக்கொண்டுவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய நண்பர் ஒருவரின் தாயார் இறந்தபோதும் ஏறக்குறைய இதேபோன்று நடந்தது நினைவுக்கு வந்தது. தன் தாயாருக்கு ஒரே மகனான அவர், எவ்வித ஆரவாரமும் இன்றி அனைத்துச் சடங்குகளையும் செய்து முடித்துவிட்டு, தம்முடைய தாயாரின் உடலை மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பயன்பாட்டிற்கென தானமாக அளித்து விட்டார். நண்பரின் இச்செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இறப்புகளை முன்னிட்டு பொதுவாக நடப்பது என்ன என்பதை யாவரும் அறிவோம்.

ஒரு வீட்டில் இறப்பு ஒன்று நேர்ந்து விட்டால், தங்களது துயரத்தில் ஊரே பங்குகொள்ள வேண்டும் என்பது போல் பலர் நடந்து கொள்கிறார்கள்.
நேரம் செல்லச் செல்ல, இறந்து போனவரின் உடல் பல்வேறு மாறுபாடுகளை அடையும் என்பது தெரிந்தும்கூட சுமார் இரண்டு நாட்கள் வரையிலும் இறுதிச்சடங்குகளைத் தாமதப்படுத்துவது கண்கூடு. முக்கியமான நெருங்கிய உறவினர்கள் வந்தாலும்கூட திருப்திப்படாமல், தூரத்து உறவினர்களும் வந்து சேரும் வரை இறந்தோர் உடலை வைத்திருக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது என்பதற்காக நாள் கணக்கில் உயிரற்ற உடலை வீட்டிலேயே பலர் நடுவில் அடைகாக்கின்றார்கள்.

இறப்பு ஒன்று ஏற்பட்டவுடன் உறவினர்களுக்குச் சொல்கிறார்களோ இல்லையோ, தாரை, தப்பட்டை வாத்திய கோஷ்டிக்கு முதலில் தகவல் சென்று விடுகின்றது. அவர்கள் வந்து சேர்ந்தது முதல், இறுதி ஊர்வலம் கிளம்பி அடுத்த தெருவைத் தாண்டும் வரை வாத்தியச் சத்தம் அக்கம்பக்கத்தினரை ஒரு வழி பண்ணிவிடும். அக்கம்பக்கத்து வீடுகளிலுள்ள குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒலி மாசு காரணமாக அடையும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த மேளச்சத்தத்திற்கேற்ப ஆட்டம் போடும் இளவட்டங்களின் அட்டகாசத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஊரே கொளுத்திப்போடும் வெடிகளையெல்லாம் இறப்பு நிகழ்ந்த வீட்டினர் வாங்கி வெடிப்பது இன்னொரு பெரும் சங்கடம் ஆகும். இதனால் கிளம்பும் கந்தகப் புகை மூச்சுத்திணறலுக்கே வழிவகுக்கும்.
அடுத்தபடியாக, இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக பலரால் வைக்கப்படும் மாலைகளும் மலர் வளையங்களும் இறுதி ஊர்வலத்தின்போது பிய்த்து வீதியில் இறைக்கப்படுகின்றன. சிலர் ஆர்வமிகுதியில் மாலைகளை மின் தடக்கம்பிகள் மீது வீசுவதும் உண்டு. இதனால் எதிர்பாராமல் மின்பொறிகள் கிளம்பி தீ விபத்து நேர்வதற்கும் வாய்ப்புண்டு.

உதிர்க்கப்படும் மலர்களும், வெடிக்கப்படும் வெடிகளின் சிதறல்களும் குப்பைக் குவியல்களாய் சாலையில் கிடைப்பது எத்தனை மோசமான விஷயம். உள்ளாட்சித் துப்புறவுப் பணியாளர்கள் மறுநாள் அந்தக் குப்பை மலைகளை அகற்றும் வரை அனைவருக்கும் சங்கடம்தான்.
இன்னும் சொல்வதென்றால், இறப்பு நிகழ்ந்த வீட்டைச் சேர்ந்த சிலர் சோகத்தை மறப்பதற்காக என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதும், அவர்களால் தகராறுகள் கிளம்புவதும் அரங்கேறுகின்றன.
இது தவிர, இறந்து போனவர் உள்ளூரில் முக்கியப் புள்ளியாகவோ, பிரபல தாதாவாகவோ இருந்து விட்டால் சில மணி நேரத்துக்குப் போக்குவரத்துமுடக்கம், கடையடைப்பு எல்லாமும் நிகழ்கின்றன. இவற்றின் காரணமாக இறந்தவர் மீது மரியாதையும், இறப்பு நிகழ்ந்த வீட்டினர் மீது அனுதாபமும் ஏற்படுவதற்கு பதில், பலருக்கும் வெறுப்பும் கோபமும்தான் ஏற்படுகின்றன.

இறந்தவர்களை அமரர் என்று அழைத்து, அவர்களை தெய்வத்துக்குச் சமமாக மதிப்பது நமது பண்பாடு. இறுதிச்சடங்குகளும் இறுதி ஊர்வலங்களும் இறந்தவர்களின் பெயருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும். அந்தப் பெருமை ஆர்ப்பாட்டங்களால் ஒருபோதும் கிடைப்பதில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024