Thursday, June 21, 2018

மருத்துவ தலைநகராக மாறும் 'மதுரை': 'எய்ம்ஸ்' மருத்துவமனையால் தென் மாவட்டங்களின் 'முகம்' மாறுமா?

Published : 21 Jun 2018 10:41 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் | படம்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மத்திய அரசின் 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, மதுரை தோப்பூர் ஆகிய இடங்களை பரிந்துரை செய்தார். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நான்கு வழிச்சாலை, 200 ஏக்கர் நிலம், தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், ரயில்வே நிலையம், மிக அருகில் சர்வதேச விமானப்போக்குவரத்து வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மதிப்பீடு செய்யப்பட்டு 5 இடங்களில் ஒன்றை தேர்வு செய்வதாக கூறப்பட்டது.

இதில், 7 கி.மீ., தொலைவில் மதுரை விமானம் நிலையம், 2 கி.மீ., தொலைவில் என்எச்-7 நான்கு வழிச்சாலை, மிக அருகிலே திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் மதுரை ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மதுரை பெற்றிருந்தது.
 
மேலும், மதுரை, தென் மாவட்டங்களை இணைக்கும் பெருநகரம் என்பதாலும், கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள 18 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எளிதாக பயன்பெறுவார்கள் என்பதாலும் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என தென் மத்திய மாவட்ட மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

5 இடங்களை பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை குழுவும், தோப்பூரையே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 'எய்ம்ஸ்' இடம் தேர்வில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. திடீரென்று தமிழக அரசு, தோப்பூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் செல்வதால் அங்கு 'எய்ம்ஸ்' அமைப்பது சிக்கலாக இருப்பதாக கூறி தஞ்சாவூர் செங்கிப்பட்டியை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. ஆனால், மத்திய அரசு, கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடத்தில் மட்டுமே 'எய்ம்ஸ்' அமைக்கப்படும் என கறாராக கூறிவிட்டது.

இந்த விஷயத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒருமித்த கருத்து இல்லாததால்தமிழகத்தில் 'எய்ம்ஸ்' அமைவது தள்ளிப்போய் வந்தது. அதேநேரத்தில் தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 'எய்ம்ஸ்' மருத்துவுமனைக்கான கட்டிப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

அதனால், 'எய்ம்ஸ்' விவகாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலைக்கு சென்றது. 'இடம்' தேர்வில் மத்திய அரசும், மாநில அரசும் ஒருவர் மீது ஒருவர் பழியைப்போட்டு தப்பிக்கப்பார்த்தனர். அதிருப்தியடைந்த உயர்நீதிமன்றம் கிளை, கடந்த வாரம் ஜூன்-14-க்குள் 'எய்ம்ஸ்' அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.

மற்றொரு புறம் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து 25 அமைப்பினர் டெல்லி, சென்னை, மதுரையில் கடந்த 3 ஆண்டாக மனித சங்கிலிப்போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் தோப்பூரில் 'எய்ம்ஸ்' அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மாநில அரசு அதற்கு தேவையான போக்குவரத்து வசதி, மின்சாரம், குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவால் தற்போது தென் மாவட்ட மக்களுடைய கோரிக்கையை ஏற்று தற்போது மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைகிறது.

அங்கு 200 ஏக்கரில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவனை ரூ.1,600 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. அந்த 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் முதற்கட்டமாக 100 எம்பிபிஎஸ் இடங்கள், 60 செவிலியர் பயிற்சி இடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அடுத்து ஆராய்ச்சிப்படிப்புகள், முதுநிலைப்படிப்புகளும் வர உள்ளது. அத்துடன் புற்றுநோய் கட்டிகள், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த ஓட்டம், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளை ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்யத் தேவையான ரேடியோ ஆக்டிவ் எலிமன்டை மும்பைக்கு அருகில் உள்ள ட்ராம்பேயில் உள்ள பாபா அணுஆராய்ச்சி நிலையத்திலிருந்து விரைவாக தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வர முடியும்.



அதனால், இதுவரை மதுரை சென்னைக்கு அடுத்த இரண்டாவது மருத்துவ தலைநகராக திகழ்ந்தது. தற்போது மதுரை ஸ்மார்ட் சிட்டியாக தேர்வாகி அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதலமைச்சர் கே.பழனிசாமி விரைவில் திறந்து வைக்க உள்ளநிலையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையும் அமைவதால் தமிழகத்தின் மருத்துவ தலைநகராக மதுரை தலைநிமிர வாய்ப்புள்ளது.

இதுவரை வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையிலே மிகப்பெரிய வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தும் வடமாவட்டங்களை நோக்கியே சென்றது. தற்போது முதல் முறையாக தோப்பூரில் மத்திய அரசின் மிகப்பெரிய மருத்துவத்திட்டமான ‘எய்ம்ஸ்’ அமைவதால் தென் மாவட்டங்கள் மருத்துவம், கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மதுரையில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை தென் மாவட்டங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய தொழிற்பேட்டைகள், மத்திய, மாநில அரசுகளின் பிரதானத்திட்டங்கள் இதுவரை தொடங்கப்படவில்லை.

அதனால், தென் மாவட்டங்களை சேர்ந்த படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் போன்ற தொழில்நகரங்களுக்கு இடம்பெயரும் அவலம் தொடர்ந்தது. தற்போது ‘எய்ம்ஸ்’ முதலீடு அமைவதால் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் விரைவுப்படுத்தப்பட்டு சர்வதேச விமானநிலைய அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவத்தொழிற்சாலைகள், சிறிய, பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்து திட்டங்கள் தொடங்க வாய்ப்புள்ளது.

3.25 கோடி மக்கள் பயன்பெற வாய்ப்பு:

மதுரை மடீட்சியா முன்னாள் தலைவரும், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான மணிமாறன் கூறுகையில், "தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆண்டிற்கு 27 லட்சம் நோயாளிகள், 9 லட்சம் உள் நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர். சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்குதான் அதிகளவு நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகின்றனர்.

18 மாவட்டங்களை சேர்ந்த 3.25 கோடி மக்கள், நேரடியாக 'எய்ம்ஸ்' மருத்துவமனையால் நேரடியாக பயன் பெறுவார்கள். 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைந்தால் மருந்து தொழிற்சாலைகள், அதற்கான துணை நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்பட ரூ; 5 ஆயிரம் கோடி வரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் புதிய தொழில் முதலீடுகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

மதுரை விமானநிலையம் மிக அருகில் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் பிற நகரங்களில் இருந்தும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் மதுரை வர வாய்ப்புள்ளது. அதனால், மதுரையில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சிப்பெற வாய்ப்புள்ளது. தென் மாவட்ட மக்கள், உயர் தர சிகிச்சைக்காக பல நூறு கி.மீ., கடந்து சென்னைக்கோ, பெங்களூரு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் குறைந்தப்பட்சம் நேரடியாகவும், மறைமுகமாவும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

'எய்ம்ஸ்'க்கு அருகில் 'பஸ்போர்ட்'

மதுரையில் 'பஸ்போர்ட்' அமைக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அந்த 'பஸ்போர்ட்'டை விமான நிலையத்திற்கும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் தோப்பூருக்கும் இடையில் 'ரிங்' ரோட்டிற்கு தொடர்புள்ள பகுதியில் அமைந்தால் விரைவான போக்குவரத்திற்கும், தென் மாவட்டங்கள் வளர்சிக்கும் உதவியாக அமையும்.

திருமங்கலம் ரயில்நிலையத்தில் முனையத்திற்கான வேலைகளை தற்போதே தொடங்கினால் 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டி முடிக்கும் நிலையில் எல்லாமே ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. ஏற்கணவே மதுரை நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், சாலைகளை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். 'எய்ம்ஸ்' செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் நெரிசல் இன்னமும் கூடுதலாக வாய்ப்புள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல், காளவால் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலங்களை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். நகரச்சாலைகளை எளிதாக கடந்து செல்ல அவற்றை அகலப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

MES applies for cluster varsity status, but others not too keen

MES applies for cluster varsity status, but others not too keen  Ardhra.Nair@timesofindia.com 27.12.2024 Pune : Maharashtra Education Societ...