Thursday, June 21, 2018


பெண் பயணிகளைக் கருத்தில் கொள்ளாமல் ஊழியர்களின் சுயநலத்திற்காக பயண வழி உணவகங்களில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகள்

Published : 21 Jun 2018 18:56 IST


என்.முருகவேல் விருத்தாசலம்
 



விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே தத்தாதிரிபுரத்தில் கழிப்பிட வசதியற்ற பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப நிறுத்தப்படும் பயண வழி உணவகங்களால் மிகவும் மோசமான அனுபவங்களையே பல பயணிகள் சந்தித்திருக்கின்றனர்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் போது காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிவரை இரு புறங்களில் புற்றீசல் போன்று மோட்டல் என்ற உணவகங்கள் இருப்பதைக் காணலாம். அந்த உணவகத்தில் தேநீர் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு சுடுநீர் கிடைக்கும். விலை பற்றி கேட்டால் அடாவடியான பதில். வேணும்னா குடி, இல்லைன்னா போயிட்டே இரு.

உணவு பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் வைத்தது தான் விலை? அவர்கள் நினைப்பது தான் தரம்! சாப்பிட வேண்டியது பயணியின் தலையெழுத்து என்பது சொல்லாமல் சொல்லப்படும் கட்டளை. இத்தகைய மோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விலை நகர்புறங்களில் உள்ள ஓட்டல்களில் நிர்ணயிக்கப்படும் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதைக் காண முடியும். சில மோட்டல்களில் விலைப் பட்டியலே இருக்காது. அவர்கள் சொல்லும் விலைக்கு பணம் கொடுக்கவேண்டும். இதில் கேட்கப்படாமலேயே டிப்ஸூம் வசூலிக்கப்படும். விலை அச்சிடப்பட்ட தின்பண்டங்களின் விலையோ கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இது தவிர இயற்கை உபாதைக்கான கழிப்பிடம் முதல் குடிநீர் அருந்துவது வரை கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பயணிகள் நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலில், இத்தகைய மோட்டல்களில் இயற்கை உபாதைக்காக இறங்க நேரிடுகிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பேணப்படுவதில்லை. சில இடங்களில் சிறுநீர் கழிக்க மட்டுமே வசதி உள்ள சூழலில் வயதான பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. மேலும் சில இடங்களில் கழிப்பிட வசதி முற்றிலும் இல்லாத நிலையில், திறந்தவெளியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் விபத்தைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது.

குறிப்பாக சிதம்பரம்-சேலம் செல்லும் பயணிகளுக்காக, விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் மற்றும் தத்தாதிரிபுரம் ஆகிய இடங்களில் பேருந்துகளை நிறுத்தும் ஊழியர்கள், பெண் பயணிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நிறுத்திவிடுகின்றனர். அப்பகுதியில் உணவகம் இருக்கிறதே தவிர, இயற்கை உபாதைக்கான வசதி இல்லை. இதனால் ஆண் பயணிகள் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். பெண் பயணிகளின் நிலையோ பெரும் கவலைக்குரியதாகிவிடுகிறது.

அண்மையில் தத்தாதிரிபுரம் பகுதியில் பெண் பயணி ஒருவர் திறந்தவெளியில் மறைவான இடத்திற்குச் சென்ற போது, பாம்பு கண்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த போது, கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சிலரை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விரட்டும் நிலை உள்ளது. மிகுந்த சங்கடத்திற்குள்ளாகும் பெண்கள், சிறுநீரை வெளியேற்ற முடியாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த விவகாரம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் கேட்டபோது, ''இதுபோன்ற உணவகங்களில் ஏன் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன என்ற கேள்வியை பயணிகள் எங்களிடம் கேட்கின்றனர். இத்தகைய அடிப்படை வசதியற்ற உணவகங்களில் நிறுத்தவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அதிகாரிகள் கட்டாயப்படுத்தும் போது நாங்கள் என்ன செய்வது?அவர்கள் கட்டாயத்தை மீறினால் விளக்கக் கடிதம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, எந்த மோட்டலில் நிறுத்தவில்லையோ, அதே மோட்டலுக்குச் சென்று ரசீதில் சீல் வைத்து வாங்கி வந்தால்தான், பயணக் கட்டண வசூலைப் பெற முடியும் என்று வாய்மொழி உத்தரவால் வதைக்கப்படுகிறோம்'' என்கின்றனர்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூரப் பேருந்துகள் நெடுஞ்சாலை ஓரங்களில், அடிப்படை வசதியற்று அமைந்துள்ள குறிப்பிட்ட சில மோட்டல்களில் உணவுக்காக நிறுத்தப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அவலத்தை களைவதற்கு அரசு நிர்வாகம் நேரடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பது தொலைதூரப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பயணிகள் நலப் பிரிவு மேலாளர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு முறையும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். பயணிகளின் வசதிக்கேற்ப உணவகங்களை நிறுத்தவேண்டும் என்று. ஆனால் எவரும் மதிப்பதில்லை. குறிப்பாக சிதம்பரம்-சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை ஆத்தூரில் தான் நிறுத்தவேண்டும் என பரிந்துரைத்திருக்கும் பட்சத்தில், இதுபோன்ற கழிப்பிட வசதியற்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்துவது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக அப்பகுதியில் ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...