Tuesday, August 7, 2018

அண்ணா பல்கலையில் மறுமதிப்பீடு பணி துவக்கம் : முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு அழைப்பு

Added : ஆக 06, 2018 23:27

அண்ணா பல்கலையில், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த பணிக்கு, முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களை அனுப்பும்படி, இன்ஜி., கல்லுாரி களுக்கு பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அண்ணா பல்கலையில், 2017 ஏப்ரல், மே மாதங்களில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வுத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மறுமதிப்பீட்டில், 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாணவரிட மும், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று, அதிக மதிப்பெண் வழங்கியதாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'டம்மி எண்' : இந்த விவகாரத்தில், பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியின் முன்னாள் முதல்வர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் இன்ஜி., கல்லுாரிகளை சேர்ந்த, ஏழு பேராசிரியர் களும் வழக்கில் சிக்கிஉள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத் தாள் மறுமதிப்பீடு பணி, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை, சென்னை அண்ணா பல்கலை தேர்வுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மறுமதிப்பீட்டு பணியை மேற்கொள்ள, துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு தொடர்பாக, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, தேர்வுத் தாள்களுக்கு சரியான, 'டம்மி எண்' ஏற்படுத்தி, அந்த டம்மி எண்ணை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் திருத்துவதில், எந்த அதிகாரி மற்றும் மைய பொறுப்பாளர்களின் சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது என, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், அனைத்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கான தேர்வை நடத்துவது, விடைத்தாளை திருத்தி, முறையாக தேர்வு முடிவை வெளியிடுவது போன்ற நடவடிக்கையில், பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள் மற்றும் தனியார், இன்ஜி., கல்லுாரிகளின் பங்கு முக்கியமானது.பெரும்பாலான தனியார் கல்லுாரிகள், தங்களின், 70 சதவீத ஆசிரியர்களை, தேர்வுத்தாள் திருத்த பணிக்கு அனுப்பாததால், திருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

சர்ச்சை : இந்த நிலை தொடர்ந்தால், பேராசிரியர்களை அனுப்பாத கல்லுாரி மாணவர்களின், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்.மேலும், தேர்வுத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில், பேராசிரியர்களின் பங்கும், அவர்களுக்கான பொறுப்பும் மிகவும் முக்கியமானது. திருத்த பணிக்கு வரும் பேராசிரியர்கள் தங்களின் மனசாட்சிப்படி, திருத்த பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் மட்டுமே, அந்த பணி அர்த்தமுள்ளதாக இருக்கும்.மாறாக, பொதுமக்கள் மத்தியில், பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தம் குறித்து, சர்ச்சை ஏற்படும் வகையில், நடந்து கொள்ளக்கூடாது. சமூகத்தில் கசப்பான மற்றும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், கல்லுாரிகளும், அனுபவம் மிக்க, திறமையான, மனசாட்சியுடன் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, பணிக்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில், எந்த பிரச்னைக்கும், சர்ச்சைக்கும் இடமின்றி, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...