சென்னை : திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் தி.மு.க.,வின் 50 ஆண்டு கால தலைவரும் ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி செய்தவருமான மு.கருணாநிதி, தன்னுடைய 95வது வயதில் சென்னையில் நேற்று காலமானார். முதுமை காரணமாக உடல் நலிவுற்று ஒன்றரை ஆண்டாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த அவர் 11 நாட்களாக மருத்துவமனையில் நடந்த மருத்துவ போராட்டத்துக்கு பின் மறைந்தார்.பல போராட்ட களங்களை கண்டு வெற்றி பெற்றவர், மரணத்துக்கு எதிரான போராட்டத்தில் மட்டும் தோற்றார். காவிரி மண்ணில் பிறந்த கருணாநிதியின் உயிர் காவேரி மருத்துவமனையில் பிரிந்தது.
பத்திரிகையாளராக, தமிழ் இலக்கிய படைப்பாளியாக, திரைப்பட வசனகர்த்தாவாக, பல பரிமாணங்களை பெற்ற கருணாநிதி தமிழக அரசியலிலும், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என அரை நுாற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக, ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தார். திருவாரூருக்கு அருகே திருக்குவளை என்ற குக்கிராமத்தில் பிறந்தாலும் தேசிய அரசியலில் சில நேரங்களில் புயல் வீசவும், பல நேரங்களில் அமைதி திரும்பவும் காரணமாக இருந்திருக்கிறார்.
'என் உயிரினும் மேலான...' என கரகரப்பான தன் காந்த குரலால் இவர் பேசும் விதமே தனி. அந்த குரலுக்கு கட்டுப்பட்டு காத்து கிடக்கும் தொண்டர்கள் கூட்டம் ஏராளம். தன்னை நேசிக்கும் தன் படைப்பை வாசிக்கும் தொண்டர்களை அழைப்பதற்கென்றே 'உடன்பிறப்பே' என்ற மந்திரச் சொல்லை உருவாக்கி அதையே தி.மு.க.,வின் அடையாளமாகவும் ஆக்கியவர். அதிகாரம் கையில் இருந்தாலும், கை விட்டு போயிருந்தாலும் மக்கள் ஏற்றாலும் புறந்தள்ளினாலும் தன்னம்பிக்கையை தளர விடாமல், விடாமுயற்சியுடன் கொள்கைக்காக உழைப்பது தான் கருணாநிதியின் தனிச்சிறப்பு.
ஈ.வெ.ரா., காலத்தில் அரசியலுக்குள் நுழைந்து, அண்ணாதுரை அடியொற்றி, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தலைவர்கள் பலரையும், களத்தில் கண்டவர்; வென்றவர்; சிறை பல சென்றவர். தான் சந்தித்த தேர்தல்களில் தோல்வியே காணாமல், தமிழினத்திற்காக பாடுபட்டவர். ஐந்து முறை
முதல்வர் பதவியை அலங்கரித்தவர். சுயமரியாதை, ஹிந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு என ஏற்றிருந்த கொள்கைகளில் இறுதி மூச்சு வரை நிலைத்திருந்தவர். திரைப்படத் துறையிலும் 'பராசக்தி, மனோகரா' என பல புதுமைகளை படைத்து, அழிக்க முடியாத காவியங்களை தந்த கருணாநிதி, 50 ஆண்டு காலமாக தி.மு.க.,வின் தலைவராக பதவி வகித்து, ஏறக்குறைய ஒரு நுாற்றாண்டு வாழ்ந்து, மறைந்திருக்கிறார்.
உடல்நலக்குறைவு :
ஒன்றரை ஆண்டாகவே வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த 'டிரக்கி யோஸ்டமி' என்ற செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக, கருணாநிதிக்கு நோய் தொற்று உருவானது. இதனால் அவருக்கு காய்ச்சலும் சளித் தொல்லையும் ஏற்பட்டு, கடுமையாக அவதிப்பட்டார். அதற்கான சிகிச்சைகள் அவர் வசித்த சென்னை, கோபாலபுரம் வீட்டில் அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 27 நள்ளிரவில் மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கருணாநிதியின் உடல் நிலை மோசமானது.
இதையடுத்து மறுநாள் அதிகாலை 1:30 மணிக்கு, காவேரி மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரிரு மணி நேர சிகிச்சையில் மருத்துவ அதிசயமாக, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், கருணாநிதியின் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. பிரபல கல்லீரல் நோய் நிபுணர் முகம்மது ரேலா சிகிச்சை அளித்தார். கல்லீரலில் புற்றுநோய் இல்லை என்றும், ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தபோது, திடீரென மஞ்சள் காமாலை நோய் கருணாநிதியை தாக்கியது. இதனால், நேற்று முன்தினம் இரவில் அவரது உடல் நிலைக் கவலைக்கிடமானது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாக, முக்கிய உறுப்புகளை தொடர்ந்து செயல்பட வைப்பது, பெரும் சவாலாக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், அவரது நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் ஒரு அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உயிர் வாழ தேவையான முக்கிய உடல் உறுப்புகள், தொடர்ந்து செயல் இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயிர் பிரிந்தது :
இறுதியாக நேற்று மாலை 6:10 மணிக்கு, அவரது உயிர் பிரிந்ததாக, மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை இழந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்' என மாலை 6:40 மணியளவில் மருத்துவமனை தரப்பில் வெளியிடப் பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் வந்து பார்த்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும், கருணாநிதி நலம் பெற வேண்டினர். 11 நாட்களாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். ஆனால், அவர்களின் வேண்டுதலும் பிரார்த்தனையும் கருணாநிதியின் கடைசி நாட்களை தள்ளிப் போட உதவியதே தவிர, இயற்கையின் பிடியில் இருந்து அவரின் உயிரை காப்பாற்ற உதவவில்லை.
'கலைஞர்' என அவரது கட்சியினரால் அன்போடு அழைக்கப்பட்ட கருணாநிதி, நேற்று காலமானார். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் நெஞ்சத்தில், வாழும் கலைஞராக அவர் இருப்பார்!
No comments:
Post a Comment