Wednesday, August 8, 2018

ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்















ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருப்பவர். அதைக் கைப்பற்றியும் வைத்திருப்பவர். வயது முதிர்வால் அவரது மேடை முழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனாலும், தனது எண்ணங்களை எழுத்துக் கர்ஜனைகளால் கொண்டு செலுத்துவதில் 95 வயதைத் தாண்டியும் சலிக்காமல் இருந்தவர். அவர் கடைசியாக ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டி.



'நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்' என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”''உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப் பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”

''எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”

''பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”

''ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”

''பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”

''உங்கள் ஆட்சிக் காலத்தின்போது 'தீர்க்க முடியாமல் போய்விட்டதே!' என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”
''காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும்,

நீதிமன்றங்களுக்குச் சென்றும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைத்தும், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தும்கூட, இதுவரை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாமல் காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.”

''நாகரிகச் சூழலும் மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
''யாருக்கும் சந்தேகம் வேண்டாம், தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் ஒளி நிறைந்ததாகவும், ஊக்கமூட்டுவதாகவும் எப்போதும் இருக்கும்.”

'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்' என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”

''ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”

''தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”

தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”

'கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!' என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”

''நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய 'ஆனந்த விகடன்' வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”

நீங்கள் எதிர்த்து அரசியல் செய்த தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

எவரையும் எதிர்த்தோ, எதிர்ப்பதற்காகவோ நான் அரசியல் நடத்தியது இல்லை. நான் கொண்ட கொள்கைகளை பெரியார் - அண்ணா வழி நின்று வளர்த்தெடுத்து, நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் என்னுடைய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.”

ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?
நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது,

 'நானும் பிரார்த்திக்கிறேன்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.”

ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?

பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியைவிட்டுப் பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அவர் மறைவுக்குப் பிறகு அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.”

இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”

அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?”

காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.”

உங்களது ஒருநாள், எப்படிக் கழிகிறது?

''காலை எழுந்தவுடன் காபி குடித்துவிட்டு, அனைத்து நாளேடுகளையும் படிப்பேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடன்பிறப்பு மடல், கேள்வி-பதில், அறிக்கைகள் போன்றவற்றை உதவியாளர்களிடம் 'டிக்டேட்' செய்வேன். பின்னர் அமர்ந்தால், கட்சிப் பிரச்னைகள்தான். கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தம்பிமார்களுடன், மதியம் சாப்பிடப்போகும் நேரம் வரை கலந்துபேசி முடிவுகளைக் காண்பேன். மதியம் ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம். மாலையில் வீட்டிலோ, அண்ணா அறிவாலயத்திலோ அமர்ந்து, கழகத்தினருடன் உரையாடுவேன். நிகழ்ச்சிகள் இருக்கும் நாளில் அவற்றில் கலந்துகொள்வேன். திருமண வரவேற்பு நிகழ்ச்சி களுக்குச் செல்வேன். நேரம் கிடைக்கும்போது 'டி.வி.' பார்ப்பேன்.”

நீங்கள் தி.மு.க தலைவராகி அரை நூற்றாண்டு நெருங்க இருக்கிறது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

நான் கழகத்தின் தலைவராகி, 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48-வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த 48 ஆண்டுகளில் எத்தனையோ உயர்வு-தாழ்வுகள், மேடு-பள்ளங்கள், வேதனை- சோதனை-சாதனைகள், இழிமொழிகள், பழிச்சொற்கள், புகழ்ச்சிப் பாராட்டுக்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். ஆனாலும் சின்னஞ்சிறு வயதில், தமிழ்க் கொடி தாங்கி, எத்தகைய எழுச்சி உணர்வுகளோடு பொதுவாழ்வில் கால் பதித்தேனோ, அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் எனது இதயத்தில் நிரம்பி வழிகின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய 'திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் ஆலமரத்துக்காக, 48 ஆண்டுகள் இரவு-பகல் பாராமல் உழைத்திருக்கிறோம் என்ற பெருமித உணர்வும் எனக்கு ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...