Saturday, August 4, 2018

காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்!


கே.குணசீலன்

க.சதீஷ்குமார்

என்.ஜி.மணிகண்டன்

ம.அரவிந்த்




திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டபப் படித்துறை. இரு கரைகளையும் நனைத்தபடி தவழ்ந்தோடிக் கொண்டிருக்கிறாள் காவிரித்தாய். படித்துறையில் தலைவாழை இலை போட்டு காதோலை கருகமணி, சப்பரம், மஞ்சள் கயிறு, பூ, பழங்கள் வைத்து படையலிட்டு காவிரித் தாயை வணங்கி மகிழ்கிறார்கள் மக்கள்.



ஆடிப்பெருக்கு விழா தஞ்சையின் பண்பாட்டு விழாக்களில் ஒன்று. அன்றைய தினம், தங்கள் வாழ்க்கையை வளமாக்கும் காவிரியைத் தாயாக உருவகப்படுத்தி படையலிட்டு வணங்குவார்கள் காவிரிப்படுகை மக்கள். புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி இத்திருநாளைக் கொண்டாடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, ஆடிப்பெருக்கு தினம் தஞ்சைப்படுகை நிலப்பரப்பில் களைகட்டவில்லை. காரணம், காவிரியில் தண்ணீர் இல்லை. இந்தாண்டு, இயற்கையின் கருணையால் காவிரித்தாய் பூரிப்போடு நிறைந்தோடி வருகிறாள். புத்துணர்வோடு மக்கள் கூடி ஆடிப்பெருக்கைக் கொண்டாடினார்கள்.




மேட்டூரில் தொடங்கி பூம்புகார் வரையிலான காவிரிக் கரையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக காவிரிக்கரையில் கூடினார்கள். படித்துறையில் தலைவாழை இலை போட்டு அரிசி, வெல்லம், எள், பொட்டுக்கடலை சேர்த்து கிளறி செய்யப்பட்ட காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தாலி, காதோலை, கருகமணி, மரப்பலகையால் செய்யப்பட்ட சப்பரம் மற்றும் பழங்களைப் படைத்து காவிரித் தாய்க்குச் சமர்ப்பித்தனர்.

சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். பெண் குழந்தைகளுக்குக் கழுத்திலும் ஆண்களுக்குக் கையிலும் மஞ்சள் கயிற்றைக் கட்டி மகிழ்ந்தார்கள். புதுமணத் தம்பதிகள், புதிய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, தாலியைக் கழட்டிவைத்து வணங்கியதோடு புதியத் தாலிச்சரடை மாற்றித் தங்கள் கணவர் கையாலேயே மீண்டும் கழுத்தில் கட்டிக்கொண்டார்கள். புதுமணத் தம்பதிகளின் கேலி கிண்டல், விளையாட்டுகளால் காவிரிக் கரை நெடுக கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.



இந்தக் கொண்டாட்டத்தில் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் பங்கேற்று சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தச் சப்பரத்தைக் கயிறு கட்டி இழுத்தபடி ஊரையே சுற்றி வலம் வந்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.

கரைபுரண்டு ஓடிவரும் காவிரித்தாயால் விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமன்றி சப்பரம், காதோலை, கருகமணி போன்ற ஆடிப்பெருக்குக்கான பொருள்கள் செய்பவர்களின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது.

கும்பகோணம் மடத்துத்தெரு படித்துறையில் காதோலை, கருகமணி விற்பனை செய்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``காதோலை, கருகமணி செய்வது ஒரு கைவினைத் தொழில். பனை ஓலையை வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்து, வண்ணம் கலந்த நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொள்வோம். பனை ஓலைகள் வண்ணமாகிவிடும். பிறகு, சுருளாகச் சுற்றி, அதன்மேல் கறுப்பு நிற வளையலைப் பொறுத்தினால் கருகமணி ரெடி. இதோடு ஒரு குங்கும பாக்கெட்டையும் சேர்த்து விற்பனை செய்வோம். இதுதான் எங்க குடும்பத் தொழில்..." என்றார் அவர்.



``காதோலை,கருகமணியைக் காவிரித்தாய்க்கு ஏன் படைக்கிறோம்?"

``சிலப்பதிகாரத்தில் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடுகளைத்தான் பெண்கள் அணிகலனாக அணிந்திருந்தார்கள். இறைவனை நகைகளால் அலங்கரிப்பது நம் தொன்ம மரபு. அதன் தொடர்ச்சிதான் பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை காவிரிக்குப் படைப்பது. காவிரித்தாய் தளும்பிவரும் நாளான ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் திரண்டு காதோலை, கருகமணியைக் காவிரித்தாய்க்குப் படைத்து மரியாதை செய்து, அதை அந்தத் தண்ணீரிலேயே விட்டு நன்றி கூறுவார்கள்" என்கிறார் ரமேஷ் சிவம் குருக்கள்.

திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை அருகே சப்பரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் பேசினோம்.

``ஆடிப்பெருக்குப் பெரியவர்களுக்கான விழா மட்டுமல்ல... குழந்தைகளும் கொண்டாடி மகிழும் விழா. கரை புரண்டோடும் காவிரித்தாயைப் பெரியவர்கள் வணங்குவதை குழந்தைகள் காணவேண்டும். தண்ணீரை தெய்வமாக மதித்துப் போற்றுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். அதற்காகத்தான் குழந்தைகளையும் அழைத்து வந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை அலங்காரம் செய்து தேரில் வைத்து நகர்வலம் வருவது வழக்கம். இதனால் அந்தத் தெய்வத்தின் மனம் மட்டுமன்றி மக்களின் மனமும் குளிரும்.

அதை உணர்த்தும் வகையில்தான் இந்தச் சப்பரம் இழுக்கும் மரபு தொடங்கியது. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சப்பரம் வாங்கித்தந்து, இழுத்து விளையாடவிட்டு, படித்துறையில் வைத்து அவற்றுக்கு பூஜைகளும் செய்வார்கள்..." என்கிறார் அவர்.

இயற்கையின் பெருங்கருணையால் காவிரி கரைபுரண்டு ஓடி வருவதால் மக்கள் இந்த ஆடிப்பெருக்கை கோலாகலமாகக் கொண்டாடிக் களித்து வருகிறார்கள்..!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024