Saturday, August 4, 2018


`தப்பைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்' - மறுகூட்டல் விவகாரத்தில் உமா அதிரடி 


எஸ்.மகேஷ்



``சென்னை அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் விவகாரத்தில் தப்பைக் கண்டுப்பிடித்ததே தேர்வு கட்டுப்பாட்டு பிரிவுதான்'' என்று உமா தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, மறுகூட்டல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டல் விவகாரம் தொடர்பாக அவரிடம் பேசினோம்.

`` சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக நான், பணியாற்றியபோது, பல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அதற்குதான் இப்போது பழிவாங்கப்படுவதாக கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால் மறுகூட்டலில் நடந்த முறைகேட்டைக் கண்டுபிடித்ததே தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுதான். ஆனால், உண்மைகள் மறைக்கப்பட்டு நானும் என் டீமும் பழிவாங்கப்பட்டுள்ளோம். என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து துணைவேந்தரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். அதற்குள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதிலிருந்து நிச்சயம் விடுபடுவேன்.

நான் லஞ்சம் வாங்கியதாகக் கூறும் குற்றச்சாட்டில் உண்மையல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த முறைகேட்டில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. முறைகேடுகள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மீது தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சந்தேகம் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், தேர்வு எழுதியபோது பெற்ற மதிப்பெண்களுக்கும் மறுகூட்டலில் பெறப்பட்ட மதிப்பெண்களுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. வெளிப்படையாகத்தான் மறுகூட்டல் விவரங்களை வெளியிட்டேன். பத்து ஆண்டுகள் புள்ளி விவரங்களையும் தெரிவித்துள்ளேன். இதனால் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மூத்த அதிகாரிகள் ஒப்புதலுடன்தான் தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் நான் பணியாற்றினேன்.

பொதுவாக, விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும். ஒரு தேர்வுத் தாளை இரண்டு ஆசிரியர்கள் திருத்தும்போது மதிப்பெண்கள் மாறுபடுவதுண்டு. 64 லட்சம் விடைத்தாள்களில் 6,000 விடைத்தாள்களில் மட்டுமே மதிப்பெண்கள் மாறுபட்டுள்ளன. 73,000 மாணவர்கள் மறுகூட்டலுக்குப்பின் தேர்ச்சி பெற்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக 1,040 தேர்வாளர்கள் மீது கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் இனி வரும் காலங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, நடந்து பல மாதங்கள் கடந்தபிறகு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024