`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்
அருண் சின்னதுரை
'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி , சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, மல்லிகைப் பூ, பாப்கான், ஜிகர்தண்டா, புத்தகங்கள் என்று பல்வேறு பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் , கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார். இதனால், பயணிகள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், " நான் திருச்சி செல்வதற்காக 'பாயின்ட் டூ பாயின்ட்' வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூபாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா? திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு' என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் . முதியவர் என்றுகூட பார்க்காமல், தரக் குறைவாகப் பேசியதால் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அதிக விலைகொடுத்து அந்தப் பழங்களை வாங்கிச் சென்றேன்” என்று வேதனை தெரிவித்தார்.
'இது தற்போது நடைபெறுவதில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல நாள்களாக அரங்கேறிவருகிறது . இதில், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று அடவாடிச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .
No comments:
Post a Comment