Saturday, August 4, 2018


`திகார் ஜெயிலில்கூட போடுங்க... அவளை கட்டிக்கமாட்டேன்'- நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் பகீர்!

எஸ்.மகேஷ்


`திகார் ஜெயலில் என்னைப் போட்டாலும் அவளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் சிலம்பரசனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.



திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக உள்ளார். மணலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இவரின் உறவினர் வீடு, கிழக்குக் கடற்கரைச்சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ளது. அங்கு, அடிக்கடி சிலம்பரசன் வருவார். அப்போது, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியுடன் சிலம்பரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நர்சிங் மாணவி, சிலம்பரசனிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், திருமணத்துக்கு முன் சிலம்பரசன் மாயமாகிவிட்டார்.

இதையடுத்து நர்சிங் மாணவி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன், விசாரணை நடத்தினார். விசாரணையில் நர்சிங் மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிலம்பரசன் ஏமாற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிலம்பரசனும் நர்சிங் மாணவியும் நெருங்கிப் பழகியுள்ளனர். அதில் நர்சிங் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை சிலம்பரசனிடம் தெரிவித்ததும், கருவை கலைக்கும்படி அவர் கூறியுள்ளார். அதன்படி நர்சிங் மாணவியும் செய்துள்ளார். மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போதும் கருக்கலைப்பு நடந்துள்ளது. மூன்றாவது முறையாகவும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், இந்தமுறை அவர் கருவைக் கலைக்காமல், திருமணம் செய்துகொள்ளுமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததோடு, திண்டிவனத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையறிந்த அந்த மாணவி எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், சிலம்பரசனிடம் விசாரித்தோம். அப்போது அவர், 'திகார் ஜெயிலில்கூட போடுங்கள், அவளை மட்டும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறினார். இதையடுத்து, சிலம்பரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024