Saturday, August 4, 2018

மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி − தேனியில் பரபரப்பு!

எம்.கணேஷ்

வீ.சக்தி அருணகிரி


தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் மனைவி மகாலெட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று இரவு 11.45 மணிக்கு தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல், அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குநர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவும் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க எங்களை கண்ணன் அனுமதிக்கவில்லை. நேரம் ஆக, ஆக எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதைக் கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுகூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே. சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்தப் பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாகக் கூறி விரட்டுகிறார்.

அந்தக் காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பாட்டிமார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தோம். அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போதுகூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.

மருத்துவர்கள் சொல்வதுபோல, அடிப்படையான பரிசோதனைகள் மட்டும் செய்யலாமே, அதுவும் வீட்டிலேயே பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்டபோது, ``நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே, என் மனைவியும், குழந்தையும் ஆரோக்கியமாகதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்குப் பரிசோதனை?" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தாய், சேய் இருவரையும் பரிசோதிக்க அனுமதி கேட்டு, கண்ணனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024