Wednesday, November 7, 2018

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

ரமேஷ் கந்தசாமி

துரை.நாகராஜன் 
vikatan
தேன் கெட்டுப்போகாது, ஆனால் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது லாபம் தரும். இதனால்தான் தேனீ வளர்ப்பு அதிகமான லாபம் தரும் என்று சொல்கிறார்கள்.


உணவுப் பொருட்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன். உலகில் தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை நிரப்பியிருந்தன. பில்லியன் டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.



தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் மரியாதையும் அதிகம் இருக்கும். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

"தேனில் அடைத்தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவர்த்தி எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டல் செய்து வருகிறேன். தேனை மட்டும் மக்களுக்குக் கொடுத்தால் லாபம் குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் மதிப்புக் கூட்டல் முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சுத்தமான ஒரு கிலோ தேன் 550 ரூபாய்க்கு விற்பனையானால், தேன் நெல்லி கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.


ஒரு பொருளை மதிப்புக் கூட்டினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். அதிலும் தேனை மதிப்புக் கூட்டினால் இன்னும் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் சந்தையில் கிடைக்கும் தேன்கள் அதிகமாகப் போலியானதாகத்தான் இருக்கிறது. எங்களிடம் விசாரிக்கும் வாடிக்கையாளர்களும் மற்றவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நீங்கள் தேன் கொடுக்கக் கூடாது என்று கேட்பார்கள். அவர்கள் கேட்பதுபோலவே தேன் கொடுத்தால் அது தரமான தேனாக இருக்காது. இத்தாலிய தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேன் ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஆனால், நாட்டுத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்க முடியாது. தேன் விலை அதிகமாக இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்றுதான். குறைந்த விலையில் தேனை எதிர்பார்க்க வேண்டாம். இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ தேன் எடுப்பதுமுதல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது வரை அதிகமாகச் செலவாகிறது. மக்கள் குறைந்த விலைக்குக் கேட்கும்போதுதான் கலப்படமும் சந்தையில் அதிகமாகிறது.

எதிர்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். உண்மையான தேன் பண்ணைகள் என சொல்லிக் கொண்டு அதிகமான தேன் பண்ணைகள் போலியாக இயங்கி வருகின்றன. நாங்கள் கொடுக்கும் தரமான தேனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளி மார்கெட்டில் தேன் 350 ரூபாய்க்கு விலை போனாலும், மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள். மேல் நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் வருடம் முழுவதும் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாட்டுத் தேனீக்கள் மூலம் தேன் வருடம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கும். சீசனில் கிடைக்கும் தேனின் அளவு குறையுமே தவிர, முழுமையாக நின்று விடாது. இதுதவிர, நாட்டுத் தேனில்தான் சத்துகளும் அதிகமாக இருக்கும். சுத்தமான தேன் அதிக கெட்டித் தன்மையுடன் இருக்காது. எப்போதுமே நீர்மத் தன்மையுடன்தான் காணப்படும்.



இந்தத் தொழிலை ஆரம்பிக்கும்போது வெறும் ஆயிரம் ரூபாயில்தான் ஆரம்பித்தேன். இன்று என்னிடம் இருப்பதுபோல பண்ணை அமைக்கக் 5 கோடி ரூபாய் தேவைப்படும். ஒரு தொழிலை துவங்கிவிட்டால் அதனை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர, இதுபோதும் என்று எப்போதுமே நின்றுவிடக்கூடாது. அதேபோல தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 10 இந்திய தேன் பெட்டிகளை வைத்தால் ஒரு விவசாயி வருடத்திற்குக் குறைந்தபட்சம் இண்டு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். 10 பெட்டியில் இருந்து வருடத்திற்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் விலை 550 ரூபாய். இதன் மூலமாக 55 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருடத்திற்கு 10 கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தின் விலை 2,000 ரூபாய். அது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலே சொன்ன அனைத்துமே பொதுவாக தேனீ வளர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் வருமானம்தான். எனக்கு இந்தத் தொழிலில் செலவுபோக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அடைத்தேன் கிலோ 1200 ரூபாய்க்கும், சர்க்கரை நெல்லி கிலோ 350 ரூபாய்க்கும், மெழுகுவத்தி 500 ரூபாய்க்கும், தேன் நெல்லி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், இத்தாலி தேன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வருமானம் சீசனைப் பொறுத்து மாறுபடும்.

கிடைக்கும் தேன் கெட்டுப்போகாது, ஆனால் நிச்சயமாகச் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்துவிடுவது உடனடி லாபம் தரும். இதுதவிர, மதிப்புக் கூட்டல் தொழிலில் நம் உற்பத்தி செய்யும் பொருள் மக்களுக்கு அத்தியாவசியமான பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் எப்போதுமே பொருட்கள் நமக்கு நிறைவான வருமானத்தைக் கொடுக்கும். எங்கள் பண்ணையில் தேனீப்பெட்டிகள், தேனீக்கள் விற்பனை செய்தும் வருகிறோம். ஒரு தொழிலில் முழுமையாக இறங்கினால் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் தொழிலில் சறுக்காமல் சாதிக்க முடியும். மதிப்புக் கூட்டல் தொழிலில் முக்கியம் தரம். என் விளம்பரதாரர்கள், என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான். அந்த அளவிற்கு என் தேன் பொருட்களின் தரம் இருக்கும். தொழிலில் போட்டி இருப்பது ஆரோக்கியம்தான்... உருவாக்கும் பொருட்களில் போட்டி இருப்பது நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல. வெறும் தேனை விற்றுக் கொண்டிருக்கும்போது கிடைத்த வாடிக்கையாளர்களை விடத் தேன் மதிப்புக் கூட்டல் பொருட்களில் கிடைத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்" என்றார்.

தேனிலும் மதிப்புக் கூட்டல் தொழில் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இவர் நல்ல உதாரணம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024