Wednesday, June 19, 2019

அகில இந்திய மருத்துவ 'சீட்' இன்று முதல் பதிவு

Updated : ஜூன் 19, 2019 07:09 | Added : ஜூன் 19, 2019 02:12

சென்னை : மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று துவங்குகிறது.நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லுாரிகள் நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலையில் உள்ள எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. இதன்படி தமிழகத்தில் அரசின் 23 மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 3250 எம்.பி.பி.எஸ். - 100 பி.டி.எஸ். இடங்களில் இருந்து 506 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.

இந்த இடங்களில் 2019 - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகம் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு 'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவ - மாணவியர் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்.தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியை 25ம் தேதி உறுதி செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் பணி 26ம் தேதி நடைபெறும். இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் 27ம் தேதி வெளியிடப்படும். கவுன்சிலிங்கில் இடங்களை பெற்றவர்கள் 28ம் தேதி முதல் ஜூலை 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும்.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு ஜூலை 6 முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு செய்யும் பணி ஜூலை 10, 11ல் நடைபெறும்; முடிவுகள் 13ம் தேதி வெளியிடப்படும். கல்லுாரியில் சேராத இடங்கள் மற்றும் நிரம்பாத இடங்கள் ஜூலை 23ல் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலை மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லுாரிகளில் 'மாப் - அப்' எனப்படும் சிறப்பு கவுன்சிலிங் ஆக. 17ல் நடைபெறும்.



No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024