Wednesday, June 26, 2019

கருணைப் பணிக்கு ஒரே சீரான நடைமுறை உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 25, 2019 23:15

மதுரை, : 'கருணைப் பணி நியமன திட்டத்தை ஒட்டுமொத்தமாக சீராய்வு செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்ட கொள்கைக்கு உட்பட்டு இத்தையை சிறப்புத் திட்டத்திற்கு அனைத்து துறைகளிலும் ஒரே சீரான நடைமுறைகளை அமல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்களை தமிழக தலைமைச் செயலர் பிறப்பிக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.திருமங்கலம் அருகே லாலாபுரம் பரணி சக்தி தாக்கல் செய்த மனு:

எனது தந்தை சீனிவாசன் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 2001ல் பணிக்காலத்தில் இறந்தார். கருணைப் பணி நியமனம் கோரி தமிழக அரசிடம் மனு அளித்தேன். உரிய காலத்தில் விண்ணப்பிக்கவில்லை எனக்கூறி மனுவை பள்ளிக் கல்வித்துறை நிராகரித்தது. 2001-06 காலகட்டத்தில் பணி நியமன தடைச் சட்டம் அமலில் இருந்தது. நிராகரித்த உத்தரவை ரத்து செய்து கருணைப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.அரசுத் தரப்பில், 'மனுதாரருக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவரது சகோரர் பி.இ., முடித்துவிட்டு வருவாய் ஈட்டுகிறார். மனுதாரரின் தாய் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார். மனுதாரர் குடும்பத்தில் வறுமை சூழல் இல்லாத காரணத்தால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது

.நீதிபதி உத்தரவு: அரசுப் பணியில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பம் பாதிக்கக்கூடாது என்ற நோக்கில், அவரது வாரிசுகளில் ஒருவருக்கு கருணைப் பணி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்தகைய சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தும் போது இட ஒதுக்கீடு, தகுதி, முன்னுரிமையை பின்பற்றுவதில்லை. இவ்விவகாரத்தில் அரசு மிகக் கவனமாக இருக்க வேண்டும். எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது. உண்மையில் ஏழ்மை மற்றும் தகுதியானவர்களுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும். இம்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும்போது கடும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.கருணைப் பணி என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக கோர முடியாது. பணியின்போது இறந்த ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருணைப் பணி வழங்கினால், அவர் அதன் மூலம் அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றுவாரா என மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. அதற்கு 'இல்லை' என்றுதான் பதில் வரும்.இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் பறிபோகக் கூடாது. அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

அப்போதுதான் ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியானவர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகும் சூழல் ஏற்படும். அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணைப் பணி வழங்கும் திட்டமாக மட்டும் பார்க்காமல், அரசு ஊழியர் இறப்பால் உண்மையில் பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக பார்க்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.கருணைப் பணி நியமன திட்டத்தை ஒட்டுமொத்தமாக சீராய்வு செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்ட கொள்கைக்கு உட்பட்டு இத்தையை சிறப்புத் திட்டத்திற்கு அனைத்துத் துறைகளிலும் ஒரே சீரான நடைமுறைகளை அமல் படுத்தும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும்போது முறைகேடு, விதி மீறல்களில் ஈடுபடும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். இந்நடைமுறைகளை எட்டு வாரங்களில் முடிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசுத் தரப்பில் ஜூலை 26 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024