Thursday, June 27, 2019

சென்னை நகரை குளிர்வித்த மழைஉற்சாகத்தில் நனைந்த பொதுமக்கள்



சென்னை நகரை நேற்று மழை பெய்து குளிர்வித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகத்தில் மழையில் நனைந்து மகிழ்ந்தனர்.

பதிவு: ஜூன் 27, 2019 05:30 AM

சென்னை,

கோடை வெயில், கத்திரி வெயில் என அடுத்தடுத்த வெப்ப தாக்கங்களில் சிக்கி தவித்த மக்களுக்கு அடுத்து வந்த தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை பெரும் சோதனையை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.

தலைநகரின் சாபம் தீராதா? வருண பகவான் கருணை காட்டி மழை தரமாட்டாரா? என்று சென்னை மக்கள் தினமும் ஏங்கிக்கொண்டு இருந்தனர். அதற்கேற்றாற்போலவே கடந்த சில நாட்களாக சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான தூறல் மழையும் பெய்து மக்களை பரவசம் கொள்ள செய்தது.

பெருமழை

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதலே மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலை 5.30 மணிக்கு லேசாக தூறலுடன் தொடங்கிய மழை அடுத்தடுத்த நிமிடங்களில் வேகம் எடுத்து, பெருமழையாக பெய்ய தொடங்கியது.

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

மழையில் நனைந்து மகிழ்ச்சி

நேரம் செல்ல செல்ல பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. எப்போதுமே மழை பெய்தால் வீட்டில் தஞ்சம் அடையும் பொதுமக்கள் நேற்று மழையை வரவேற்று உற்சாகத்தில் நனைந்தனர். குறிப்பாக இளைஞர்-இளம்பெண்கள் மழையில் நனைந்து ஆடி மகிழ்ந்தனர். கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு எப்போதுமே மழை பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் நேற்று கூரையை தாண்டியும் வீட்டுக்குள் ஒழுகி விழும் மழை நீரை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

பலத்த மழை காரணமாக நேற்று சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பூமி குளிர்ந்தது

இத்தனை நாட்களாக வெயிலுக்கு பயந்து குடை பிடித்து சென்ற மக்கள், இன்றைக்கு அந்த குடையை மழையில் நனையாமல் இருக்க பிடித்து சென்றனர். வீடுகளில் கூட பெய்த மழை நீரை பத்திரமாக வாளிகளில் பிடித்ததையும் பார்க்க முடிந்தது. மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, இரவு 7 மணிக்கு ஓய்ந்தது. மழை ஓய்ந்தும் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்கள் தூறல் விழுந்துகொண்டே இருந்தன. அந்தவகையில் 1½ மணி நேரம் பெய்த மழை பூமியை மட்டுமல்ல, மக்களின் உள்ளத்தையும் குளிரவைத்து விட்டது. தொடர்ந்து இதேபோல வருண பகவான் கருணை காட்டவேண்டும், தலைநகரின் சாபம் தீரவேண்டும் என்று சென்னைவாசிகள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.



சமூக வலைதளங்களில் ‘டிரெண்டிங்’ ஆன மழை

சென்னையில் நேற்று பரவலாக பெய்த மழை சென்னை நகர மக்களை உற்சாகத்தில் நனைய வைத்தது. இதையடுத்து ‘சென்னையில் மழை’ என்பதை தங்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்களாக வைக்க தொடங்கினர். மழையில் உற்சாகமாக நனைந்தபடியும், தங்கள் பகுதியில் பெய்யும் மழையை படம்பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், ‘சென்னையில் மழை பெய்யலையா?’ என்று கேட்ட வெளியூர்களில் வசிக்கும் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மழை படங்களை அனுப்பி மகிழ்ந்தனர். வாட்ஸ்-அப் மட்டுமின்றி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தலைநகரின் மழை படங்கள் நேற்று வைரலாக பரவியது. இதனால் சமூக வலைதளங்களில் நேற்று ஒரே நாளில் மழை ‘டிரெண்டிங்’ ஆகிப்போனது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...