Sunday, June 23, 2019

பழைய சோறுக்கு புது மவுசு
By DIN | Published on : 23rd June 2019 09:31 AM |



பழைய சோறு- அந்தக் காலத்தில் கிராமங்களில் காலை உணவாகப் பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது கிராமங்களில் கூட காண முடிவதில்லை, நம் தாத்தா, பாட்டிகளின் உணவில் முக்கிய இடம் பிடித்திருந்த பழைய சோறு, நாளாக நாளாகக் காணாமலேயே போய் விட்டது. அதற்கு முக்கியக் காரணம் பானையில் சோறு வடித்த காலம் போய் குக்கர் பயன்பாட்டுக்கு வந்தது தான்.

முதல்நாள் இரவு சமைத்த உணவு மிச்சமானால் அதில் நீர் ஊற்றி, அடுத்த நாள் காலை மோர் ஊற்றியோ, சின்ன வெங்காயத்தைப் பொடியாகத் தூவியோ உண்டால், ஆஹா அது அமிர்தம் தான். ஆனால் குக்கர் சாப்பாட்டில் அந்த ருசி வருவதில்லை. பழைய சோறு கிடைக்காதா என ஏங்கிக் கிடந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள "நெல்பேட்டை உணவுக் களஞ்சியம்'. இங்கு தினந்தோறும் சுவையான பழைய சோறு, சிறிய மண் பானைகளில் விற்கப்படுகிறது. வீட்டில் தயாராகும் பழைய சோறு விற்பனையில் அப்படி என்ன வித்தியாசம் விற்பனையாளர்களிடமே பேசினோம்.
"கடந்த ஆண்டு நாங்கள் இந்தப் பழைய சோறு விற்பனையை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் பழைய சோறு காசு கொடுத்து வாங்குவதா என வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனவே, அவர்கள் கண் பார்வையில் படும்படி நாங்கள் பழைய சோறு சாப்பிட ஆரம்பித்தோம். பின்னர் அதைப் பார்த்து அவர்களும் ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள். இப்போது மற்ற உணவுகளுக்கு இணையாகப் பழைய சோறு விற்பனை சுடச்சுட நடைபெறுகிறது.

நாங்கள் விற்பனை செய்யும் பழைய சோறு ஸ்பெஷலாகத் தயார் செய்யப்படுவது. இதற்கென்றே முதல் நாள் இரவு நாட்டுப் பொன்னி அரிசியில் சாதம் வடித்து அதனைச் சிறிய சிறிய பானைகளில் பிரித்து, நீர் ஊற்றி வைத்துவிடுவோம். தொடர்ந்து மறுநாள் அந்தப் பானைகளில் சிறிதளவு மோர் ஊற்றி வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவோம். பழைய சோறுக்கு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய், பருப்பு வடை மற்றும் சிறிய கிண்ணத்தில் தயிரும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்.
பொதுவாக வீட்டில் பழைய சோறு கொடுத்தாலே சிலர் முகம் சுளிப்பார்கள், அப்படியிருக்கையில் அதனை விற்பனை செய்யும் எண்ணம் எப்படி வந்தது எனக் கேட்டால், பழைய சோறு எல்லாக் காலத்திலும், எல்லோருக்கும் பிடித்தமான உணவு. ஆனால், கைப்பக்குவத்தில் தான் அதன் ருசி இருக்கிறது. இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சாப்பாடு தான். அதில் பழைய சோறு போட்டால் இந்த ருசி கிடைக்காது. நாங்கள் இதற்கெனத் தனியாகச் சோறு வடித்து, சிறிய மண் பானைகளில் நீர் ஊற்றி வைப்பதால் இதன் ருசி தனித்துவமாக இருக்கிறது. வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டு செல்கின்றனர்'' என்கிறார் இந்த உணவகத்தின் இயக்குநர் லட்சுமி சிவக்குமார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ""தினந்தோறும் பழைய சோறுக்கென மட்டும் இரவில் எட்டு முதல் பத்து கிலோ அரிசியில் சாதம் வடிக்கிறோம் நாட்டுப் பொன்னி அரிசி என்பதால் ஒரு கிலோ அரிசியில், சுமார் 3 கிலோ 600 கிராம் வரை சாதம் கிடைக்கும். இதனை ஏழு பேர் வரை சாப்பிடலாம். சோறு வடித்த கஞ்சியை ஊற்றி, நீர் ஊற்றினால் மதியத்திற்கு மேல் புளித்து விடுகிறது என்பதால், தூய்மையான நீரை மட்டுமே பழைய சோறு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம்.

முதல் மூன்று மாதங்களுக்குத் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழைய சோறு சாப்பாடு விற்பதே பெரிய விசயமாக இருந்தது. ஆனால், சாப்பிட்டவர்கள் ருசியை பற்றி பலரும் சொல்லி இன்று பலர் பழைய சோறு சாப்பிட அக்கறை காட்டுகிறார்கள். இதனால் தற்போது பழைய சோறு விற்பனை படு ஜோர்.

பாரம்பரிய உணவு வகைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் "தீஞ்சுவை' என்ற நவதானிய உணவகம் ஒன்றை ஆரம்பித்தோம். அங்கு உளுத்தங்களி, வெந்தயக் களி, கம்பங்களி என பல பாரம்பரிய உணவுகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.

ஆனால், அதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல், கடந்தாண்டு இந்தப் பழைய சோறு விற்பனையை ஆரம்பித்தோம். தற்போது காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இங்கு பழைய சோறு விற்பனை நடைபெறும். அழகிய மண் பானையில் வைத்துப் பரிமாறுகிறோம்.

ஹோட்டலில் மட்டுமின்றி ஆன்லைனிலும் பழைய சோறு விற்பனை நன்றாக நடைபெறுகிறது. தினமும் 25 முதல் 40 வரை பழைய சோறு ஆன்லைனில் மட்டும் விற்பனை ஆகிறதாம். ஆன் லைனில் பானையில் சாப்பாடு கேட்பவர்களிடம் மட்டும் கூடுதலாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது. மற்றபடி பழைய சோறு ரூ.50க்கு பார்சல் அனுப்பப்படுகிறது. அதோடு, தங்களது கடையில் தயாரிக்கப்படும் சில காய்கறி "சைட்டிஷ்'களையும் சேர்த்து அனுப்புகிறோம்'' என்றார்.

-வனராஜன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024